

கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு இடையேயான மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பது தமிழகத்தையே வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது.
பள்ளி, கல்லூரிக் காலங்கள் ஒரு மனிதரின் குறைகளைச் சுருக்கி நிறைகளைப் பெருக்குகிற மாயாஜாலத்தை நிகழ்த்துபவை. நட்பே பிரதானம் என வாழும் பருவம் அது. அதற்கு மாறாகச் சில வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர் மோதல்கள் சமூக அமைதியை அசைத்துப் பார்ப்பதாக அமைந்துவிடும். அவற்றில் ஒன்றாகியிருக்கிறது திருவாரூர் மாவட்டத்தின் இனாம்கிளியூரைச் சேர்ந்த மாணவர் ஞா.கவியரசன் உயிரிழப்பு.
சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியில் கழிப்பறைக்குச் செல்லும் வழியில் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல், இரு தரப்பாகப் பிரிந்து மோதிக்கொள்ளும் அளவுக்குப் பெரிதாகியிருக்கிறது.
காவல் நிலையம் சென்று பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு இந்த விவகாரம் இருந்திருக்கிறது. செப்டம்பரில் இதற்குத் தற்காலிகமாக உடன்பாடு எட்டப்பட்டு, இரு தரப்பினரும் வழக்கம்போலப் பள்ளிக்குச் சென்றுவந்தபோதும், பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கவில்லை.