வல்லரசு நாடான அமெரிக்கா அண்மையில் வரலாறு காணாத முடக்கத்தைக் கண்டதைப் பார்த்து உலகமே வாய்பிளந்தது. 43 நாள்களாக நீடித்த அரசின் நிதி / நிர்வாக முடக்கம் கடந்த புதன்கிழமை இரவு (நவம்பர் 12) முடிவுக்கு வந்தது. நிதி/ நிர்வாக முடக்கம் என்றால் என்ன? அமெரிக்காவில் மட்டும் இப்படியொரு நிகழ்வு நடப்பது ஏன்?
பரிதவித்த மக்கள்:
அமெரிக்காவில் கடந்த அக்டோபர் 1 முதல் அத்தியாவசியச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. 9 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, அஞ்சல் துறை, விமானக் கட்டுப்பாடுத் துறை உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இயங்கின. இந்தத் துறைகளின் ஊழியர்கள் ஊதியமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். ஆனால் அரசியலர்கள், பெரும் முதலாளிகள் உள்ளிட்டோருக்கு வருவாயில் எந்தக் குறையும் இல்லை.