

அண்மையில் வெளியான எழுத்தாளர் யதார்த்தனின் ‘தோறை’ நாவல் கட்டுகள் இலங்கை, யாழ்ப்பாணம் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தமிழ் இலக்கியச் சூழலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவம் குறித்துச் சில சொற்கள் இருப்பதால், நாவல் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் அனுமதி கிடைத்த பிறகே நாவல் கட்டுகள் விடுவிக்கப்படும் என்று சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தகைய சம்பவங்கள் இலங்கைக்குப் புதிதல்ல. முன்னதாக ஷோபாசக்தி, தீபச்செல்வன், ரயாகரன் போன்ற எழுத்தாளர்களின் சில புத்தகங்களும் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சகத்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையைக் கண்டித்து மனித உரிமை ஆணையம் தலையிட்டும், போராட்டங்கள் நடந்தும் அரசு சற்றும் செவிசாய்க்கவில்லை என்று ஷோபாசக்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
நாவலில் ஆமிக்காரர், பீல்ட்பைக் போன்ற சொற்கள் இருப்பதாலேயே பிரச்சினைக்குரிய புத்தகமாகக் கருதுவதையும், குறைந்தபட்சம் சில அத்தியாயங்களைக் கூட படித்துப் பார்க்காமல் முன்முடிவுக்கு வருவதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடலாம்.
ஆனால், அசட்டுத்தனத்தை என்ன செய்துவிட முடியும் என்பது எழுத்தாளர் யதார்த்தன் தரப்பின் புகாராக இருக்கிறது. இந்த அநீதியான நடைமுறைக்குப் பொறுப்பேற்று, தடுத்து வைக்கப்பட்டுள்ள நூல்களை விடுவிக்கவும், இனி இதுபோன்று நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் இலங்கை அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் 107 பேர் கையொப்பமிட்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தொகுப்பு: பாரதி