

இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 280இன்படி மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான வரிகள் தொடர்பான நிதி உறவுகளைச் சீரமைக்க ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத் தலைவரால் நிதிக் குழு (Finance Commission) அமைக்கப்படுகிறது. தற்போது 16ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் அனுமதியோடு நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுச் சட்டமாக்கப்படும். பின்னர் அச்சட்டம் நடைமுறைக்கு வரும். நிதிப் பகிர்வைப் பொறுத்தவரை தமிழ்நாடு எதிர்கொள்ளும் சவால்களைப் பேசுவது அவசியம்.
நிதிப் பகிர்வின் வகைகள்: செங்குத்து நிதிப் பகிர்வு (Vertical Devolution) என்பது மத்திய, மாநில அரசுகள் நிதியைப் பகிர்ந்துகொள்ளும் முறையைக் குறிக்கும். மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் மாநிலங்களுக்கு எவ்வளவு பங்கு என்பதை இது தீர்மானிக்கும்.
மொத்த வரி வருவாயும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற 10ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், என்.கே.சிங் தலைமையிலான 15ஆவது நிதிக் குழு மத்திய வரி வருவாயில் 41% தொகையை மாநிலங்களுக்கு வழங்குமாறு பரிந்துரைத்தது.
இணையான நிதிப் பகிர்வு (Horizontal Devolution) என்பது மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வு பற்றியது. மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 41% நிதியை ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு பிரித்துக் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கச் சில அளவுகோல்கள் கையாளப்படுகின்றன.
இதன் நோக்கமே நாடு சீரான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதுதான். நியாயமான நிதிப் பகிர்வு (Equitable Distribution) கணக்கிடப்படும் முறையில் ஒவ்வொரு நிதிக்குழுவும் ‘தேவை’, ‘திறன்’அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணிகளான வருமான இடைவெளி (Income Distance), மக்கள்தொகை (Population), பரப்பளவு (Area), செயல்திறன் (Demographic Performance), வரி திறன் (Tax Effort) ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.