

நேரம் என்பது நம் கைவிரல்களின் இடுக்கில் நழுவும் மணலைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. ‘நேரமே இல்லை’ என்கிற புலம்பல் இன்று உலகின் பொதுமொழியாகிவிட்டது. மனித நாகரிகத்தின் ஆதிக் கண்டுபிடிப்பான சக்கரம் முதல் இன்றைய அதிநவீன செயற்கை நுண்ணறிவு வரை அனைத்தும் மனிதர்களின் வேலையை எளிதாக்கவும் நேரத்தைச் சேமிக்கவுமே உருவாக்கப்பட்டவை. ஆனால், வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால், முந்தைய எந்தக் காலக்கட்டத்தையும்விட இன்றுதான் மனிதர்கள் நேரத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
இங்குதான் அந்தப் பெரிய முரண்நகையே தொடங்குகிறது. ஒருபுறம், ‘எனக்கு நேரமே இல்லை, கையில் காலமே போதவில்லை’ என்று தவிப்பவர்கள், மறுபுறம் தங்களுக்குக் கிடைக்கும் அந்தச் சொற்ப நேரத்திலும் எல்லாவற்றையும் அவசர அவசரமாக, வெறித்தனமான வேகத்தில் செய்து முடித்துவிடத் துடிக்கிறார்கள்.
நேரமில்லாமல் அல்லாடுவதும் அதேநேரத்தில், கிடைத்த நேரத்தை அதிவேகத்தில் விரட்டுவதும் மனித குலத்தைச் சூழ்ந்திருக்கும் மிகப்பெரிய விசித்திரம்.
வேகத்தின் மீது மனித குலம் கொண்ட இந்த மோகம், நம்மைப் பொறுமையற்றவர்களாகவும் ஆழமற்ற வாழ்க்கை வாழ்பவர்களாகவும் மாற்றிவிட்டது. ஒலிச் செய்திகளை ‘2எக்ஸ்’ வேகத்தில் கேட்பது இப்போது நமக்குப் பழகிவிட்டது. நீளமான உரையாடல்களை விட்டுத்தள்ளுங்கள், ஏற்கெனவே சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய குறும்படங்களைக்கூட இன்று ‘2எக்ஸ்’ வேகத்தில் பார்க்கும் வசதி வந்துவிட்டது. சில நொடிக் காணொளியைக்கூடப் பொறுமையாகப் பார்க்க முடியாத அளவுக்கு நமது மூளை எந்த அளவிலான அழுகல் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது?