

லக்னோவைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் ருச்சிகா டாண்டனுக்கு ஒரு நாள் தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் காவல் அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர், “உங்கள் தொலைபேசி எண்ணின் மீது 22 குற்றப்புகார்கள் உள்ளன. உங்கள் வங்கிக் கணக்குகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நரேஷ் கோயல் என்பவரின் பணமோசடி வழக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நீங்கள் இப்போது ‘டிஜிட்டல் கைது’ செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறீர்கள்” என்றது அந்தக் குரல். அடுத்த எட்டு நாட்கள், அந்தப் பெண் மருத்துவர் தனது திறன்பேசியின் வீடியோ கால் கண்காணிப்பிலிருந்து விடுபட முடியவில்லை.
அவருடைய ஒவ்வொரு நகர்வும் அந்நியக் குரல்களால் கட்டுப்படுத்தப்பட்டதால், அவர் பரிதாபத்துடன் அந்தக் குரல்களையே பின்பற்றினார். தாயாரிடமோ, சக மருத்துவரிடமோ, யாரிடமும் உண்மையைச் சொல்ல முடியாத ஒரு தனிமைப் பிடியில் சிக்கினார். வீட்டின் கதவு திறந்தே இருந்தாலும், வீட்டின் ஒரு மூலையில் அவர் சிறையில் இருந்தார்.