

மனித வரலாற்றை நாகரிகப் பாதையில் வழிநடத்தியவர்கள் ஆட்சியாளர்களோ, போர்ப்படைகளோ அல்லது பெருஞ்செல்வந்தர்களோ அல்ல; தங்கள் எழுத்துகளாலும் எண்ணங்களாலும் மனித மனங்களைச் செப்பனிட்ட படைப்பாளிகளே.
சமீபத்தில் மூத்த எழுத்தாளர்கள், இயக்குநர்கள், திரைக்கதை ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்ட ஒரு பொன்விழா நிகழ்வில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மேடையில் வீற்றிருந்த அந்த மாபெரும் ஆளுமைகளில் இளையவருக்கே வயது 65ஐத் தாண்டி இருந்தது.
நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றியதைத் தவிர, இலக்கிய உலகுக்கும் எனக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை என்பதால், ஒருவிதத் தயக்கத்துடனும் நடுக்கத்துடனும்தான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.
புதிய அனுபவம்
நூற்றுக்கணக்கான மக்கள் கூடும் பிரம்மாண்டமான கூட்டங்களில் உரை நிகழ்த்திப் பழகிய எனக்கு, 20 முதல் 25 நபர்கள் மட்டுமே அமர்ந்திருந்த அந்தச் சிறிய அரங்கம் முற்றிலும் புதியதொரு அனுபவமாக இருந்தது. கெளரவிக்கப்பட்ட மூத்த கலைஞர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்ட பிறகு, பார்வையாளர்கள் வரிசையில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே எஞ்சியிருந்தனர்.
ஆனால், ஆச்சரியப்படும் விதமாக என் மனம் சிறிதும் சோர்வடையவில்லை. மாறாக, அங்கிருந்த அந்தச் சில மாபெரும் படைப்பாளிகளின் இருப்பே அந்தச் சிறிய அரங்கை முழுமையாக்கியது.
நிரம்பி வழியும் ஒரு பிரம்மாண்ட மாநாட்டில் நிற்பதைப் போன்ற பேரனுபவத்தையே என் மனம் உணர்ந்தது. அங்கு உரையாற்றியபோது என் சிந்தனையில் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதின.
ஆனால், அந்தக் கணத்தில் அவை அனைத்தையும் வார்த்தைகளாக வடித்துவிட முடியவில்லை. அந்த மேடையில் என் நாவில் எழத் தவறிய, ஆனால் என் நெஞ்சில் உறைந்த அந்த உண்மைகளை, உலகெங்கும் வாழும் அனைத்துப் படைப்பாளிகளுக்குமான மகத்தான சமர்ப்பணமாகவே இங்கு பதிவுசெய்ய விழைகிறேன்.