

வாக்கு, வாக்காளர், தேர்தல் ஆகிய மூன்றும் இணைந்து ஜனநாயகத்தின் அடிப்படை அறிவாற்றல் கட்டமைப்பை உருவாக்குகின்றன. உலகம் முழுவதும் ஜனநாயகம் விரிவடைந்துள்ள நிலையில், வாக்காளரை மையப்படுத்தும் புதிய கல்விசார் அணுகுமுறையே வாக்காளரியல். 1996இல் ‘வாக்காளரியல்’ (Voterology) என்கிற கருத்தாக்கம் முதன்முதலில் முன்வைக்கப்பட்டது.
இது அறிவியல்பூர்வமான கற்றல், ஆய்வுக்கான ஒரு தனித்துவமான கருத்தியல் அடிப்படையைக் கொண்ட கல்வித் துறை. வாக்காளரியலின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் மக்களிடையே பரப்பும் சிந்தனை வாக்காளரியம் (Voterologism) எனப்படுகிறது. வாக்காளரியலை ஒரு தனித்த கல்வித் துறையாகக் கருத வேண்டிய அவசியம் பல காரணங்களால் வலியுறுத்தப்படுகிறது.
மாற்றத்தின் புதிய கட்டம்
உலகம் முடியாட்சிகளின் கீழ் இருந்தபோது, அரசியல் அறிவியல் ஒரு தனி கல்வித் துறையாக இருக்கவில்லை. முடியாட்சிகள் ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்தபோது, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அரசியல் அறிவியல் தனிக்கல்வித் துறையாக உருவெடுத்தது. இப்போது, உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்தல் அடிப்படையிலான ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது.
வாக்களிக்கும் உரிமை இன்றைய உலகளாவிய ஜனநாயகச் சூழலின் மூலக்கல்லாகச் செயல்படுகிறது. இந்தச் சமூக மாற்றம் வாக்காளரியலை ஒரு தனித்த கல்விப் புலமாக நிறுவுவதை அவசியமாக்கியுள்ளது. தற்போது அரசியல் அறிவியல் உலகெங்கிலும் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகிறது.
மனிதச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கான தேவை என்பது தற்போதைய கல்வித் துறைகளிலிருந்து புதிய துறைகளை உருவாக்குகிறது. அரசியல் அறிவியலின் துணைப் பிரிவாக மட்டும் வாக்காளரியலைக் கருதுவதற்குப் பதிலாக, அதனைத் தனித்த கல்வித் துறையாக வளர்த்தெடுப்பதே வளர்ச்சியின் வெளிப்பாடாகும்.