

மருந்தியலில் நவீன மருத்துவம் பெருவளர்ச்சியை அடைந்துவருவதற்கு முக்கியக் காரணம், அதன் தொடர்ச்சியான ஆராய்ச்சிப் போக்குகள்தான்.
ஆண்டுதோறும் புதுப் புது மருந்துகள் வந்துகொண்டு இருக்கின்றன என்றால், அது மாறிவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்பத் தன் ஆராய்ச்சி வடிவங்களையும் பாதைகளையும் மாற்றிக்கொள்வதுதான்.
எடுத்துக்காட்டாக, இதுவரை எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய பெரும்பாலான மருந்துகள் ஆய்வக விலங்குகளின் மீதான சோதனைகளைத் தாண்டியே மனிதர்களை வந்தடைந்துள்ளன. தடுப்பூசிகள் முதல் புற்றுநோய் மருந்துகள்வரை, விலங்கின மாதிரிகள் மருத்துவ அறிவியலின் வளர்ச்சியில் அளப்பரிய பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. இப்போது இந்த ஆராய்ச்சிப் போக்கில் சில மாறுதல்களைக் கொண்டுவந்திருக்கிறது நவீன மருத்துவம்.
காரணம், விலங்குகளின் உடலில் கிடைக்கும் சோதனை முடிவுகள், மனித உடலில் அதேபோல் அமையும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. மனிதர்களும் விலங்குகளும் உயிரியல் அடிப்படையில் ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும், மரபணு அமைப்பு, வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு முறை, மருந்துகளுக்கான உடலின் எதிர்வினை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. இதுவே புதிய மருந்துகள் உருவாக்கத்தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
புதிய அறிவியல் ஆராய்ச்சி
உலகளவில் முதல் கட்ட மருத்துவ ஆராய்ச்சிக்குச் (Phase I Clinical Trial) செல்லும் பரிசோதனை மருந்துகளில் வெறும் 10 முதல் 14 சதவீதம் மட்டுமே இறுதியில் ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதியைப் பெற்றுச் சந்தைக்கு வருகின்றன. மீதமுள்ளவை இடைப்பட்ட ஆராய்ச்சிக் கட்டங்களிலேயே தோல்வியுறுகின்றன.
இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், விலங்கின ஆராய்ச்சிகள் மனிதர்களிடம் ஏற்படும் விளைவுகளைத் துல்லியமாக முன்கூட்டிக் கணிக்க இயலாததே முக்கியக் காரணம். இந்தப் பின்னணியில்தான் உலக மருத்துவ ஆராய்ச்சி புதிய பாதையை நோக்கித் திரும்பியுள்ளது. அதன் பெயர் ‘விலங்கில்லாச் சோதனை முறைகள்’ (Non-Animal Methods – NAMs).
விலங்குகளை முற்றிலுமாக ஒதுக்கி விடுவது, இந்த ஆராய்ச்சி முறையின் நோக்கமல்ல. மனித உயிரியல் அமைப்பை இன்னும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மருந்து ஆராய்ச்சியை மேம்படுத்துவதே இதன் முக்கியக் குறிக்கோள்.
மனித உயிரணுக்களில் இருந்து உருவாக்கப்படும் முப்பரிமாண ஆர்கனாய்டுகள் (3D Organoids), உடல் உறுப்புகளின் செயல்பாட்டை ஒத்த உறுப்பு-சிப் (Organ-on-a-Chip) தொழில்நுட்பம், மேம்பட்ட கணினி மாதிரிகள், செயற்கை நுண்ணறிவு, மனித உயிரணு அடிப்படையிலான ஆய்வக மாதிரிகள் போன்றவை இந்த மாற்றத்தின் மையப்புள்ளிகளாக உருவெடுத்துவருகின்றன.
இவை மருந்தின் செயல்திறனை மட்டுமல்ல; அதன் பாதுகாப்புத் தன்மை, நச்சுத் தன்மை, பக்கவிளைவுகள் ஆகியவற்றையும் மனித உடலுக்கு மிக நெருக்கமாக மதிப்பிட உதவுகின்றன. இதன் மூலம் ஆராய்ச்சிக்கான காலமும் செலவும் குறைவதோடு, வெற்றிகரமாகச் சந்தையை அடையும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியாவுக்குள் திறக்கும் புதிய வாயில்
உலகின் மிகப் பெரிய பொது மருந்து உற்பத்தியாளர்களில் இந்தியா முக்கியமான நாடு. குறைந்த விலையில் தரமான மருந்துகளை உலகின் பல நாடுகளுக்கு வழங்குவதில் இந்தியாவின் பங்கு அளப்பரியது. ஆனால், எதிர்கால மருந்துத் தொழிலின் வளர்ச்சி பொது மருந்து உற்பத்தி சார்ந்து மட்டுமே இருக்காது.
புதிய மருந்துகள், உயிரியல் மருந்துகள், தனிநபர் சார்ந்த சிகிச்சைகள் ஆகிய துறைகளே அடுத்தகட்ட வளர்ச்சியை நிர்ணயிக்கும். அதற்குத் தேவையான ஆராய்ச்சித் திறன்களை வளர்ப்பதில் இந்தியா இப்போது முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வலுவான மருந்துத் தொழில், உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள், பயோசிமிலர் (Biosimilar) உற்பத்தி அனுபவம், ஒப்பந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், உலகத் தரத்தில் பயிற்சிபெற்ற அறிவியல் மனிதவளம் ஆகியவை இந்தியாவின் மிகப் பெரிய பலம். ஆனால், இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் தேசிய அளவிலான கொள்கை இன்னும் முழுமையாக உருவாகவில்லை.
கொள்கை இல்லாமல் முன்னேற்றம் இல்லை
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகள் விலங்கில்லாச் சோதனை முறைகளை ஊக்குவிப்பதற்காகத் தேசிய மையங்கள், ஆராய்ச்சி நிதிகள், பயிற்சித் திட்டங்கள், ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை 2022இல் உருவாக்கிவிட்டன. இந்தியாவிலும் சில முன்னேற்றங்கள் தொடங்கியுள்ளன.
அறிவியல் - தொழில் துறை ஆய்வுக் கழகம் (CSIR), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR), தேசிய மருந்துக் கல்வி - ஆராய்ச்சி நிறுவனங்கள் (NIPER) போன்ற அமைப்புகள் விலங்கில்லாச் சோதனைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், அவை இன்னும் முழுமையான தேசியத் திட்டமாக உருவெடுக்கவில்லை.
எந்தெந்தத் துறைகளில் விலங்கில்லாச் சோதனை முறைகளை ஏற்கலாம்? எந்தத் தரவுகள் ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படும்? தொழில் துறைக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் என்ன வகையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்? - இது போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில் அளிக்கும் தேசியச் சட்டகமே தற்போதைய தேவை.
அத்தகைய சட்டகம் உருவானால்தான் தொழில் துறை முதலீடு அதிகரிக்கும்; ஆராய்ச்சி நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய முன்வரும்; உலகளாவிய மருந்து ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பும் அதிகரிக்கும்.
சமநிலையான அணுகுமுறையே சரி
விலங்கில்லாச் சோதனை முறைகள் வளர்ந்து வருவதால், இனி விலங்கின ஆராய்ச்சிகளுக்கு இடமே இல்லை என்று கூறுவதையும் ஏற்க முடியாது. சிக்கலான நோய்கள், அரிதான நோய்கள், பல உறுப்புகள் ஒருங்கிணைந்து செயல்படும் உயிரியல் மாற்றங்கள், குறிப்பிட்ட மருந்துக்கு நோய் எதிர்ப்புச் சக்தியின் முழுமையான செயல்முறைகள், மருந்துகளின் நீண்ட கால நச்சுத்தன்மை, இனப்பெருக்கம், கருவளர்ச்சி தொடர்பான சில ஆராய்ச்சிகள் போன்றவற்றைப் புரிந்துகொள்வதில் விலங்கின ஆய்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆகவே, விலங்கின ஆராய்ச்சிகளை முற்றிலும் நிராகரிப்பதும் தவறு; அதேவேளை அவற்றை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பதும் தவறு. மனித உயிரியல் அடிப்படையிலான புதிய தொழில்நுட்பங்களையும் அவசியமான இடங்களில் விலங்கின ஆராய்ச்சிகளையும் இணைத்துச் செயல்படும் சமநிலையான அணுகுமுறையே எதிர்கால மருத்துவ ஆராய்ச்சியின் திசையாக அமையும்.
தவறவிடக் கூடாத தருணம்
மருந்துத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி உற்பத்தித் திறனால் மட்டுமே நிர்ணயிக்கப்படாது; அறிவியல் புதுமைகளே அதை வழிநடத்தும். அந்தப் போட்டியில் முன்னிலை வகிக்க விரும்பினால், விலங்கில்லாச் சோதனை முறைகளைத் தேசிய முன்னுரிமையாகக் கருதி இந்தியா முதலீடு செய்ய வேண்டும்.
இது வெறும் ஆய்வக மாற்றம் அல்ல; மருத்துவ அறிவியலின் தத்துவத்தில் நிகழும் மாற்றம். பயனாளிகளுக்கு இன்னும் பாதுகாப்பான, மேலும் பயனுள்ள, இன்னும் விரைவாகக் கிடைக்கும் மருந்துகளை உருவாக்குவதற்கான புதிய அறிவியல் பாதை இது.
இந்த மாற்றத்தை அறிவியல் துறை, அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மருந்துத் தொழில் துறை ஆகிய அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து முன்னெடுத்தால்தான், உலக மருந்தியல் ஆராய்ச்சியின் அடுத்த அத்தியாயத்தில் இந்தியா ஒரு பங்கேற்பாளராக மட்டுமல்ல, முன்னோடியாகவும் திகழ முடியும்.
- தொடர்புக்கு: gganesan95@gmail.com