நிலைத்தன்மைக்கான புதிய அடித்தளம் | நோபல் பரிசுகள் 2026

உலகளாவிய பொருளாதார நிர்வாகத்தில் ஹால் - உட்போர்டின் ஆய்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன
நிலைத்தன்மைக்கான புதிய அடித்தளம் | நோபல் பரிசுகள் 2026
Updated on: 
3 min read

பொருளாதார வளர்ச்சி என்பது எப்போதும் ஒரே சீராக நடைபெறும் ஒன்றல்ல. சில காலங்களில் உற்பத்தி, முதலீடு, வேலைவாய்ப்பு, மக்களின் நுகர்வு போன்றவை அதிகரிக்கின்றன. வேறு சில காலங்களில் பொருளாதார மந்தநிலை ஏற்படுகிறது.

இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது நவீனப் பொருளாதாரத்தின் முக்கியக் கேள்வி. இந்தக் கேள்விக்கான அறிவியல் அடிப்படையிலான விளக்கங்களை வழங்கிய அமெரிக்கப் பொருளாதார அறிஞர்களான ராபர்ட் ஈ. ஹால் (Robert E. Hall), மைக்கேல் உட்ஃபோர்டு (Michael Woodford) ஆகியோருக்கு 2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு வல்லவர்கள்

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியரான ராபர்ட் ஹால், நுகர்வு, சேமிப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான ஆராய்ச்சிகளுக்குப் புகழ்பெற்றவர். தனிநபர்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளும் புதிய தகவல்களும் அவர்களது செலவினம் சார்ந்த முடிவுகளை எவ்வாறு மாற்றுகின்றன என்பதை விளக்கியவர்.

மக்கள் எப்போது பணத்தைச் செலவிடுகிறார்கள், எப்போது சேமிக்கிறார்கள், எதிர்கால வருமானம் குறித்த நம்பிக்கை அவர்களின் முடிவுகளை எப்படி மாற்றுகிறது என்பதையும் ஆராய்ந்துள்ளார்.

நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியரான மைக்கேல் உட்ஃபோர்டு, பணவியல் கொள்கை, வட்டி விகிதங்கள், விலை நிர்ணயம், பணவீக்க எதிர்பார்ப்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். வட்டி விகிதங்கள், விலைவாசி உயர்வு, மத்திய வங்கிகளின் அறிவிப்புகள் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இவர் விளக்கியுள்ளார்.

ஆராய்ச்சிப் பங்களிப்பு

பொருளாதாரச் சிந்தனை வரலாற்றில் ஜான் மேனார்டு கீன்ஸின் கோட்பாடுகள் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தன. பொருளாதார மந்தநிலையின்போது மக்களுக்கான அரசுச் செலவினங்களை அதிகரித்தல், வரிகளைக் குறைத்தல், வட்டி விகிதங்களைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்தத் தேவையை ஊக்குவிக்கும் என்று கீன்ஸ் வலியுறுத்தினார்.

ஆனால், 1970களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடி இக்கோட்பாடுகளின் நடைமுறை வரம்புகளை வெளிப்படுத்தியது. பொருளாதாரத்தை ஊக்குவிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலன்களை வழங்கவில்லை. அப்போது குறைந்த பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, அதிகப் பணவீக்கம் ஆகியவை ஒரே நேரத்தில் நிலவின.

இந்தப் பின்னணியில், ஹால் - உட்ஃபோர்டின் ஆராய்ச்சிகள் பேரியல் பொருளாதாரக் கோட்பாடுகளுக்குப் புதிய அடித்தளத்தை உருவாக்கின. எடுத்துக்காட்டாக, எதிர்கால வருமானம் குறையக்கூடும் என்று ஒரு குடும்பம் எதிர்பார்த்தால், தற்போதைய நுகர்வைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்கலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in