

மனிதர்கள் முதன்முதலில் தங்குமிடங்களை உருவாக்கிய காலத்திலிருந்தே தோன்றிய, தொன்மையான பொறியியல் துறை - கட்டிடவியல். மனித நாகரிகத்தின் வளர்ச்சியோடு இணைந்து, காலத்துக்கேற்ற வடிவங்களையும் தொழில்நுட்பங்களையும் உள்வாங்கி, தொடர்ந்து பரிணமித்துவரும் துறை இது.
‘அனைவருக்கும் தங்குமிடம்’ என்பது மனித குலத்தின் அடிநாதக் கனவாக நெடுங்காலமாக இருந்துவருகிறது. அந்த இலக்கு தொடுவானமாகவே உள்ளது. வளர்ந்துவரும் தேவைக்கு ஏற்ப நமது கட்டுமானப் பயணத்தின் வேகம் ஈடுகொடுக்க முடியவில்லை.
கணிப்புகளின்படி, 2030ஆம் ஆண்டில் உலகளவில் ஆண்டுக்கு சுமார் 6 கோடி வீடுகள் தேவை என மதிப்பிடப்படுகிறது. இதில், கிட்டத்தட்ட பாதியளவு தேவை இந்தியாவிலேயே உருவாகும் என்றும் கணிக்கப்படுகிறது.
முதன்மைக் கட்டிடக் கலைஞர்கள்
பண்டைய காலக் கட்டுமானங்கள் அனுபவ அறிவு, கைவினைத் திறன், உள்ளூரில் கிடைத்த இயற்கைப் பொருள்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. காலத்தின் சோதனைகளைத் தாண்டி, பிரம்மாண்டமாக நிற்கும் தென்னிந்தியக் கோயில்கள், எகிப்திய பிரமிடுகள், ஐரோப்பிய தேவாலயங்கள் மனித அறிவுக்கூர்மையின் உச்சத்தை நம் முன் நிறுத்துகின்றன.
அவற்றின் அளவும் வடிவமும் மட்டுமல்ல; அவற்றின் நிலைத்தன்மையும் நீடித்த தன்மையும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. இக்கட்டிடங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றாலும், இன்று நாம் ஆர்வத்துடன் அலசும் முப்பரிமாணக் கட்டுமானக் கருத்துகளுக்கு இவை அடித்தளம் அமைத்தன என்பதே உண்மை.
வளர்ச்சிப் பாதை
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கணினி உதவி வடிவமைப்பு (CAD), கட்டிடத் தகவல் மாதிரியாக்கம் (BIM), எண்ணிலக்க
முறை உருவாக்கம் (Digital Simulation) ஆகிய தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைந்து கட்டிடவியல் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டது.
இதன் மூலம் வடிவமைப்பாளர்களும் (Architects) கட்டிடப் பொறியாளர்களும் தத்ரூபமான முப்பரிமாண எண்ணிலக்கமுறை (Digital) சூழல்களில் கட்டமைப்புகளை முன்கூட்டியே காட்சிப்படுத்தவும் அவற்றின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்யவும் மேம்படுத்தவும் இயலும் சூழல் உருவானது.