

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சர்க்கரை நோயாளிகள் வாழும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நோய்க்கு இன்சுலின் ஊசி மருந்து, மாத்திரைகள் என இரண்டு வித சிகிச்சைகள் ஏற்கெனவே இருக்கின்றன. இன்சுலினைப் பொறுத்த அளவில் பயனாளிகள் நாள்தோறும் அதைப் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது.
அந்தச் சிரமத்தைக் குறைக்க இப்போது ஒரு புதிய வழி பிறந்துள்ளது. நாள்தோறும் இன்சுலின் ஊசி என்பதற்கு மாற்றாக, வாரம் ஒருமுறை செலுத்திக்கொள்ளும் இன்சுலின் ஊசி இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
புதிய மருந்து எவ்வாறு செயல்படுகிறது?
ஐகோடெக் (Icodec) எனப்படும் இந்த மருந்து, அவிக்லி (Awiqli) என்கிற வணிகப் பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. உலகின் முதல் நீண்ட காலச் செயல்பாடுடைய இன்சுலின் ஊசி இது. ஆண்டுக்கு 365 முறை ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நிலையை 52 முறையாக இது குறைக்கிறது என்பதுதான் இது தரும் கூடுதல் பலன்.
இன்சுலின் நீண்ட நேரம் செயல்படுவதற்காக, மனித இன்சுலின் மூலக்கூறில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாவது, இன்சுலினுடன் ஒரு கொழுப்பு அமிலச் சங்கிலி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள அல்புமின் (Albumin) என்கிற புரதத்துடன் இன்சுலின் இணைகிறது.
வாரம் ஒருமுறை இன்சுலின் தோலுக்கடியில் செலுத்தப்படும்போது, அது அல்புமினுடன் இணைந்து செயலற்ற மருந்துபோல் உடலில் தங்குகிறது. ஆனால், இந்தப் பிணைப்பு படிப்படியாக உடலில் தளர்கிறது. இன்சுலின் சிறிது சிறிதாக உடலுக்குள் செல்கிறது. இப்படி, வாரம் முழுவதும் இன்சுலின் மெதுவாக ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.
இரண்டாவது, இன்சுலின் மூலக்கூறில் மூன்று அமினோ அமிலங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் இன்சுலின் ஏற்பிகளுடன் (Insulin receptors) அது இணையும் திறன் குறைக்கப்பட்டுள்ளது. அல்புமினில் இருந்து பிரிந்த பிறகும்கூட, இன்சுலின் ஏற்பிகளுடன் குறைந்த ஈர்ப்புடன் இணைவதால் மருந்து மெதுவாகச் செயல்படுகிறது. என்றாலும், மருந்தின் செயல்திறன் குறைவதில்லை.
புதிய மருந்தின் தனித்தன்மை
ஐகோடெக் என்பது இயற்கை இன்சுலின் போன்று செயல்படும் செயற்கை இன்சுலின் (Insulin analogue) வகையைச் சேர்ந்தது. அதாவது, மனித இன்சுலினின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு வடிவம். உடலில் நீண்ட நேரம் செயல்படுமாறு, இது வடிவமைக்கப்பட்டுள்ளது.