நேபாளப் பேரிடரும் காலநிலை நீதியும்

காலநிலைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன
நேபாளப் பேரிடரும் காலநிலை நீதியும்
Updated on
2 min read

“நேபாள நாட்டின் பசுங்குடில் வாயு உமிழ்வு கிட்டத்தட்ட பூஜ்ஜியம் எனலாம். ஆனால், தான் உருவாக்காத ஒரு பிரச்சினையின் சுமையை நேபாளம் சுமந்துகொண்டிருக்கிறது.

அதிக உமிழ்வை வெளியிடும் சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தார்மிகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். எங்களுக்கு நிவாரண நிதி தேவையில்லை, எங்களுக்கு வேண்டியது நீதி, இழப்பீடு” என்று நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிஷிர் கனால் உறுதியாகக் கூறியிருக்கிறார்.

பல நூறு பேரின் இறப்புக்குக் காரணமாக இருந்த மோசமான பனிச்சரிவுப் பேரிடருக்குப் பின்னர் அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். இந்தப் பேரிடரும் அவரது அறிக்கையும் உலகெங்கிலும் காலநிலை நீதி பற்றிய பல விவாதங்களை எழுப்பியிருக்கின்றன.

நியாயமற்ற தண்டனை

உலகின் மொத்த பசுங்குடில் வாயு உமிழ்வில் 0.027 விழுக்​காட்டை மட்டுமே வெளியிடும் சிறிய நாடான நேபாளம், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த மிக மோசமான பேரிடரை எதிர்​கொண்டு ​இருக்​கிறது.

“இது சாதாரணமான வெள்ளம் அல்ல, காலநிலை மாற்றத்தால் உருவான பல அச்சுறுத்தல் நிகழ்வு​களால் உருவானது” என்று நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்​துள்ளார். கடல்மட்​டத்​திலிருந்து அதிக உயரம் கொண்ட மலைகள் (High altitude mountains) எதிர்​காலத்தில் காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்​கப்​படலாம் என்று காலநிலை நிபுணர்கள் முன்பே கணித்​திருக்​கிறார்கள்.

2024ஆம் ஆண்டிலேயே காலநிலை மாற்றத்தால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினை​களைப் பற்றி நேபாளப் பிரதி​நி​திகள் சர்வதேச நீதிமன்​றத்தில் முறையிட்​டிருந்​தனர்.

“எங்கள் நாட்டில் உள்ள பனியாறுகள், பனி, நிரந்தர உறைபனி ஆகியவை வெப்ப​மாதலால் பாதிக்​கப்​படு​கின்றன. காலநிலையால் ஏற்படும் வெள்ளம், நிலச்​சரிவு, பிற பேரிடர்கள் மக்களுக்கும் கட்டு​மானங்​களுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருக்​கின்றன.

உலக நாடுகளுக்குக் காலநிலை சார்ந்த பொறுப்புகள் இருக்​கின்றன. காலநிலை மாற்றம் என்பது சர்வதேசச் சட்டப் பொறுப்பு” என்று பிரதி​நி​திகள் அப்போது வாதிட்​டனர். இதேபோன்ற கோரிக்கைகளைத் தீவு நாடுகளும் பன்னாட்டு அரங்கில் வைத்திருக்​கின்றன.

வளர்ந்த நாடுகளின் பொறுப்​பின்மை

கள நிலவரம் இப்படி இருக்​கும்​போது, வளர்ந்த நாடுகளின் செயல்​பாடுகள் இதற்கு முற்றிலும் நேர் எதிராக இருக்​கின்றன. காலநிலை மட்டுப்​படுத்​தப்​படுதல் செயல்​பாடு​களுக்கான பாரிஸ் ஒப்பந்​தத்​திலிருந்து அமெரிக்கா விலகும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கெனவே அறிவித்து​விட்​டார்.

வளர்ந்து​வரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் கொடுத்​துக்​கொண்டு ​இருந்த நிதியுதவித் திட்டத்தையும் நிறுத்​தி​விட்​டார். அமெரிக்​காவில் வெளியிடப்​படும் பசுங்குடில் வாயு உமிழ்வுக்கான கட்டுப்​பாட்டு விதிகளையும் அவரது அரசு நீக்கி​யிருக்​கிறது.

சீனாவும் இந்தியாவும் நிலக்கரி மீதான சார்பைக் குறைத்​துக்​கொள்ள இன்னமும் தயக்கம் காட்டிவரு​கின்றன. 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்​போது, பல பெரிய நாடுகளின் உமிழ்வு இந்த ஆண்டு அதிகரித்​திருக்​கிறது. காலநிலையின் தீவிரம் இவ்வளவு மோசமாக இருக்கும் சூழலிலும் போர்கள் நடத்தப்​படு​கின்றன.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்​படுத்து​வதற்கான செயல்​பாடு​களின் போதாமை ஒருபுறம் என்றால், காலநிலைப் பேரிடர்​களால் ஏற்படும் பாதிப்பு​களிலும் ஏற்றத்​தாழ்வுகள் இருக்​கின்றன என்று சுட்டிக்​காட்டு​கிறார் பத்திரி​கை​யாளர் நெஸ்ரின் மாலிக்.

பெரிய, வளர்ந்த நாடுகளில் பேரிடர் பாதிப்பு​களைத் தாங்கிக்​கொள்ளப் பல வசதிகள் உண்டு. பாதிப்பை முழுமை​யாகவே ஏந்திக்​கொள்ளும் காப்பீடு உள்ளிட்ட துறைகள் உண்டு. பாதிப்பு​களைச் சீரமைக்கும் நவீனத் தொழில்​நுட்பம், போதுமான அளவில் நிதி ஒதுக்​கீடு, நன்கு வளர்ந்த அரசு / தனியார் துறைகள் எனப் பலவும் வளர்ந்த நாடுகளுக்கு உதவுகின்றன.

ஆனால், வளரும் நாடுகளிலும் ஏழை நாடுகளிலும் இவை இருப்​ப​தில்லை. நேபாளப் பேரிடரையே எடுத்​துக்​கொள்​வோம். இந்தப் பேரிடரின் பாதிப்பு​களைச் சரிசெய்ய மட்டுமே நேபாளத்தின் மொத்தப் பொருளா​தா​ரத்தில் பத்து விழுக்காடு பணம் தேவைப்​படும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்​திருக்​கிறார்.

இதுதவிர, வளர்ந்த நாடுகளின் தொழில்​நுட்பம், அங்கு உள்ள வல்லுநர்கள், கருவிகள் போன்ற பலவும் தேவைப்​படும். எளிதில் பாதிப்​படையக் கூடிய பகுதி என்பதால், பேரிடரில் இருந்து மீண்டு வந்தா​லும், அடுத்த பாதிப்பு ஏற்படாது என்பதற்கு எந்த உத்தர​வாதமும் இல்லை.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்​படுத்தும் செயல்​பாடுகள், தயார்நிலை போன்ற​வற்றைப் பற்றி விவாதிக்​கும்​போதே, வளர்ந்து​வரும் நாடுகள் நிதியுதவி குறித்தும் தார்மிகப் பொறுப்பு குறித்தும் கோரிக்கை விடுத்து​விட்டன.

ஆனால், இன்றுவரை அது முழுவதுமாக நிறைவேற்​றப்​பட​வில்லை. ஏற்றத்​தாழ்வுகள் நிறைந்த புவி அரசியல் சூழல், இதற்கு ஒரு பெரிய தடையாக இருக்​கிறது. சமூக நீதியை ஒரு முக்கியமான மைய அங்கமாக மாற்றினால் மட்டுமே எதிர்​காலத்தில் காலநிலைச் செயல்​பாடுகள் நியாயம் அடிப்​படையிலானதாக இருக்​கும்​.

- தொடர்புக்கு: nans.mythila@gmail.com

நேபாளப் பேரிடரும் காலநிலை நீதியும்
சர்க்கரை விலையேற்றம் கட்டுக்குள் வருமா? | சொல்... பொருள்... தெளிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in