

நேருவுடன் சி.சுப்பிரமணியம்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு துடிப்பான இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு விரும்பினார். அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வந்தார். எனவே சி.சுப்பிரமணியத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணம் நேரு மனதில் இருந்தது. அன்றைக்கு திமுகவில் இருந்த எம்ஜிஆர் கூட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏன் நியமிக்கக் கூடாது என்று சி.சுப்பிரமணியத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டது உண்டு.
அன்றைய காலகட்டத்தில் தமிழக ஆளுநராக இருந்த பிரகாசாவும் நேருவின் விருப்பம் சரியானதுதான். சி.சுப்பிரமணியத்தை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பது குறித்து முதல்வர் காமராஜரிடம் நானே பேசுகிறேன் என்றார். மேலும் சி.சுப்பிரமணியத்துடனும் இதுகுறித்து பேசினார்.
அதேநேரம், ‘நான் இன்னும் அரசியலில் போதிய அனுபவம் பெற வேண்டும். அதன் பிறகுதான் தலைவர் போன்ற பெரும் பதவிக்கு தலைமையேற்பது குறித்து முடிவு செய்ய முடியும்’ என்று நேருவிடம் தன்னுடைய நிலைப்பாட்டை சி.சுப்பிரமணியம் தெரிவித்து விட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் வேறுவழியின்றி இந்திரா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நாக்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் அமைச்சர் சி.சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக விவசாயத்தைப் பொருத்தவரை இந்தியாவில் விவசாய உற்பத்தியைப் பெருக்க கூட்டுறவு முறை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் உணவு தானிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் தன்னிறைவு அடைய சாகுபடியை விஞ்ஞானப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும், விவசாய ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும், வேளாண் உற்பத்திக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்க வேண்டும். விவசாய கூட்டுறவு முறைகளை சீராக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கூட்டுறவு முறை என்பது சோவியத் யூனியனில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய அமைப்பு என்று எதிர்க்கட்சிகளாக இருந்த சுதந்திரா கட்சி, சோசலிஸ்ட் கட்சி போன்றவை விமர்சனம் செய்தன. பொதுவாக சோசலிஸ்ட் கட்சியினர் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் உடையவர்கள் என்று கூறப்பட்டாலும், அவர்கள் காங்கிரசுக்கும், கருத்து சுதந்திரம் இல்லாத கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தாங்கள் மாற்று என்று கூறி வந்தனர். அந்த வகையில்தான் எஸ்.எஸ்.பி., பி.எஸ்.பி கட்சிகள் இயங்கி வந்தன.
அன்றைய மத்திய காங்கிரஸ் ஆட்சியின்போது, விவசாய அமைப்பில் மனித உழைப்பும், மனித ஆற்றலும், கிராமங்களில் விவசாயிகளுக்கான கூட்டுறவு சங்கங்களும், நவீன பயிற்சி முறைகளும் மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கொள்கை திட்டங்கள் வகுக்கப்பட்டன.
மேலும் புதிய தொழில் கொள்கையும் முன்வைக்கப்பட்டது. தேசிய பொருளாதார வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் முக்கியமான ஆலைகளை தனியார் தொடங்குவதற்கு ஊக்கப்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது. தனியாருக்கு கோட்டா முறை அமல்படுத்தப்பட்டது. அதேநேரம் தனியார் துறைகளுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இப்படியான சூழலில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில அதிருப்திக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. நேருவின் மகள் என்ற தகுதியால் மட்டுமே இந்திரா காந்தி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் என்று சிலர் வெளிப்படையாகவே விமர்சனம் செய்தனர். இதைத்தொடர்ந்து 1960-ம் ஆண்டில் மகர சங்கராந்திக்குப் பிறகு ஜனவரி 16, 17-ம் தேதிகளில் பெங்களூருவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் நீலம் சஞ்சீவ ரெட்டி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூத்த தலைவரான நீலம் சஞ்சீவரெட்டி, நீண்ட காலமாக காங்கிரஸ் இயக்கத்தில் பணிபுரிந்து வருபவர். சென்னை ராஜதானியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழ்நாடு - ஆந்திரா தனித்தனி மாநிலங்களாகப் பிரிந்தபோது ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சராகவும், ஆந்திரா காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும் இருந்தார். தமிழ்நாடு - ஆந்திரா பிரியும்போது அதற்கான பேச்சுவார்த்தையிலும் முக்கியப் பங்காற்றியவர் நீலம் சஞ்சீவரெட்டி.
பெருந்தலைவர் காமராஜருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தார். அதேநேரம் காமராஜர் ஆட்சியின்போது, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பல திட்டங்களை ஆந்திராவுக்கு கொண்டு சென்றவரும் சஞ்சீவரெட்டிதான்.
இப்படியான காலகட்டத்தில், உலகப் போர் முடிந்த போதிலும் ரஷ்ய - அமெரிக்க நாடுகளிடம் ஒற்றுமை இல்லாமல் பகை மேகங்கள் சூழ்ந்திருந்தன. காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பல நாடுகள் தன்னிச்சையாகச் செயல்பட்டாலும், முக்கியத் தேவைகளுக்கு அமெரிக்காவையோ, சோவியத் யூனியனையோ அண்டி இருக்க வேண்டிய சூழல் இருந்தது.
ஆப்ரிக்கக் கண்டத்தில் பல நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் எந்தவிதமான குறிப்பிடத்தக்க வளர்ச்சியோ முன்னேற்றமோ அந்த நாடுகளால் பெற முடியவில்லை. அப்போது ஹாங்கோ பிரச்சினை பூதாகரமாக இருந்தது. அதேநேரம் வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் இல்லாமல், ஐ.நா.வினுடைய மத்தியஸ்தத்தால் ஹாங்கோ பிரச்சினை ஒருவழியாக தீர்க்கப்பட்டது. இதனால் ஐ.நா. மீது உலக நாடுகளுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.
உலக நாடுகளுக்கிடையே சமாதானம், சக வாழ்வுக் கோட்பாடு ஆகியவை வரையறுக்கப்பட்டிருந்தன. இந்த வரையறைகளை அமெரிக்காவும், சோவியத் யூனியனும் லட்சுமண ரேகை மாதிரி தங்களுக்குள் கடைபிடித்தாலும், தங்களின் பகை நாடுகளின் மீது போரைத் தொடுத்தன என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம் இந்த லட்சுமண ரேகை வரையறையை சீனா எதிர்த்தது. கம்யூனிஸத்துக்கும், முதலாளித்துவத்துக்கும் இடையேயான போரைத் தவிர்க்க இயலாது என்ற கருத்தை சீனா கொண்டிருந்தது.
ஐ.நா. சபையில் சீனா உறுப்பினர் நாடாக இல்லை என்ற நிலையில், சீனாவை ஐ.நா. சபையில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்று இந்தியா திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்ததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு இடம் கிடைத்தும் நேரு அதை மறுத்துவிட்டார். அதேநேரம் பகை நாடான சீனாவுக்கு ஐ.நா.வில் இடம் கிடைக்க இந்தியா ஆதரவு அளித்தது முரண்பட்டதாக அன்றைய அரசியலாளர்கள் கருதினர்.
1961-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி மதுரையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் ஜவஹர்லால் நேரு பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், தேசிய ஒருமைப்பாடு முக்கியம் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுகவை முன்வைத்தே இந்தத் தீர்மானம் கொண்டு வந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும், மொழி, மதம், சாதி என்ற பேரில் மக்களிடையே நிலவும் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக திராவிட நாடு என்ற கோரிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் திராவிட நாடு கோரிக்கைக்கு எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் திராவிட நாடு கோரிக்கையை எழுப்புவது அர்த்தமற்றது . திராவிட நாடு வந்தால் என்ன சாதிக்க முடியும்? நாட்டு மக்களின் தேவைகளை சுயமாகப் பூர்த்தி செய்ய முடியுமா? என்றும் இக்கூட்டத்தில் பேசப்பட்டது; விவாதிக்கப்பட்டது.
அதேபோல் மத்திய அரசு - மாநில அரசுகளுக்கிடையே நிலவும் சமச்சீரற்ற ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, நவ இந்தியாவைப் படைக்க வேண்டும், ஆட்சி மொழி, மும்மொழி திட்டம், எவர் மீதும் இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது போன்றவை குறித்தும் இந்த மாநாட்டில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. 5 ஆண்டு திட்டங்களை வகுப்பதில் மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும். நாட்டு நலன், தேசிய நலனே முக்கியம் என்றெல்லாம் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
பிரதமர் நேரு பேசும்போது, சீனாவினுடைய மோதல் போக்கு பற்றி கவலை தெரிவித்தார். உலகில் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்டு இந்தியாவும், சீனாவும் ஒன்றோடொன்று ஒத்துழைக்க வேண்டும். ஒரு புதிய நவீன உலகத்தை அமைக்க உலகில் சமாதானம் நிலவ வேண்டும். அந்த குறிக்கோளை நோக்கி இந்தியாவும் சீனாவும் முன்னெடுக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த நேரு, மதுரையில் உள்ள டிவிஎஸ் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அவருடன் காமராஜரும் தங்கியிருந்தார்.
பிரதமர் நேருவின் விருப்பத்துக்கு மாறாக, இந்தியா - சீனா பகை தீராமல் தொடர்ந்த நிலையில், 1962-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது என்பது வேறு விஷயம்...
மாநிலங்களுக்கு சமச்சீரான பொருளாதார ஒதுக்கீடுகள், 5 ஆண்டு திட்டத்தை மேலும் வெற்றிகரமாக கொண்டு செல்வது குறித்தான விவகாரங்களில் பிரதமர் நேருவுடன் அன்றைய நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
அதேபோல், “நேருவின் குடும்பம் மட்டுமே காங்கிரஸ் என்பதல்ல; காங்கிரசை வழிநடத்தியவர் மகாத்மா காந்தி. நாடு விடுதலைப் பெற்றவுடன் காங்கிரஸ் இயக்கத்தை கலைக்க விரும்பியவர் காந்தி. ஆனால் நேரு அதைக் கேட்கவில்லை. தன் மகளையே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் தலைவராக்கி விட்டார்” என்றெல்லாம் சில குரல்கள் காங்கிரஸில் ஒலித்தன.
இத்தகைய சூழலில் ஒரிசாவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதொடர்பான அப்போதைய அரசியல் சூழல் குறித்தெல்லாம் அடுத்து பார்ப்போம்.
இதற்கிடையே, கடந்த ஜன.5-ம் தேதி புதுக்கோட்டைக்கு நான் சென்றிருந்தபோது புலவர் துரை மதிவாணனை சந்தித்தேன். ஏறத்தாழ 97 - 98 வயது இருக்கும் பழுத்த அரசியல்வாதி. அண்ணா, ஈவிகே. சம்பத், மதியழகன், என்.வி.நடராஜன் ஆகியோருக்கும், எஸ்.டி.எஸ்-க்கும் உற்ற நண்பராக இருந்தவர். அப்போது மாணவர் திமுகவின் தலைவராக எஸ்.டி.எஸ். இருந்தார். 1940 - 50 காலகட்டங்களில் புதுக்கோட்டைக்கு கலைஞர் சென்றால் இவர் வீட்டுக்குச் சென்று உணவு அருந்துவது வாடிக்கையான ஒன்று.
திருவையாறில் கல்வி பயின்றவர் துரை மதிவாணன். தமிழில் புலமையும், அபார பேச்சுத் திறனும் பெற்றவர். அண்ணன் நெடுமாறனுடைய புத்தகங்கள் அனைத்தையும் பிழை திருத்தம் செய்து கொடுத்தவர். அவரை நான் சந்தித்தபோது மிகவும் மகிழ்ச்சியுடன் என் கைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டார்.
“இந்து தமிழில் உங்களுடைய கட்டுரைத் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். அன்றைய காலகட்டத்தில் திமுகவில் என்ன நடந்தது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அண்ணாவுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்கள், திமுகவில் இருந்து ஈவிகே சம்பத் ஏன் பிரிந்து சென்றார் போன்ற ஏராளமான தகவல்கள் எனக்குத் தெரியும். அவற்றில் முக்கிய தகவல்களை என் கைப்பட எழுதியுள்ளேன். இதை உங்கள் கட்டுரையில் இடம்பெறச் செய்யுங்கள்” என்று கூறி 3 பக்கங்களை என்னிடம் கொடுத்தார். அவரது வாழ்க்கை வரலாறு புத்தகத்தையும் என்னிடம் வழங்கினார்.
அப்போது அவரிடம், “நீங்கள் கொடுக்கும் தகவல்களை என்னுடைய கட்டுரைத் தொடரில் பதிவு செய்யுமாறு ‘இந்து தமிழ்’ ஆசிரியர் குழுவிடம் கொடுக்கிறேன். ஆனால் அதில் கூறப்பட்டுள்ள எந்ததெந்த தகவல்களை கட்டுரையில் இடம்பெறச் செய்யலாம் என்பது ஆசிரியர் குழுவின் விருப்பம்” என்று கூறிவிட்டு, அவரிடம் விடைபெற்று கிளம்பினேன்.
தமிழக சட்டப்பேரவைக்குள் 15 உறுப்பினர்களுடன் திமுக நுழைந்த வரலாறு தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். அதோடு துரை மதிவாணன் கொடுத்த தகவல்கள் குறித்தும் அடுத்து பார்ப்போம்...
(தொடர்வோம்...)