‘தமிழ்த் தேசியம்’ பிரிவினைக் கருத்தா? - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 88

‘தமிழ்த் தேசியம்’ பிரிவினைக் கருத்தா? - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 88
Updated on
5 min read

இந்தியாவில் மொழிப் பிரச்சினைக்காகப் போராட்டம் நடத்தப்பட்டு, அதில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமே நடந்தது என்றால் அது மிகையில்லை. மொழி மீதான ஈடுபாடு தமிழக மக்கள் மத்தியில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இதேபோன்ற மொழிப் பிரச்சினை குஜராத் மாநிலத்திலும் அன்று ஏற்பட்டது.

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் பிரிவினையின்போது மொழிப்பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தது. குஜராத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாமல் மத்திய அரசு திணறியது. போதாக்குறைக்கு குஜராத் மாநிலத்தின் மூத்த தலைவரான மொரார்ஜி தேசாயும் மொழிப் பிரச்சினையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கலவரங்கள் மேலும் அதிகரித்தன. பலர் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து மொரார்ஜி தேசாய் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இருமொழிக் கொள்கை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. மொரார்ஜி தேசாயின் போராட்டம் உணர்வுப்பூர்வமாகப் பார்க்கப்பட்டாலும் அது விமர்சனங்களையும் எதிர்கொண்டது. ஆனால் மொரார்ஜி தேசாய் ஆதரவாளர்களோ, இந்தப் போராட்டம் மொழிக்காக மட்டுமல்ல, மக்களின் உரிமைகளுக்காகவும் நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்தனர்.

பிற்காலத்தில் இந்திய நாட்டின் பிரதம மந்திரியாக மொரார்ஜி தேசாய் பொறுப்பேற்ற பிறகு, அவர் நேரு குடும்பத்துக்கு எதிரான கருத்துக்களையே கொண்டிருந்தார். தான் எடுத்துக் கொண்ட முடிவில் இறுதிவரை பின்வாங்காதவர் மொரார்ஜி தேசாய். இதனால் அவரை சமரசம் செய்வது மிகவும் கடினம் என்று அரசியலாளர்கள் சொல்வது உண்டு.

ஒருமுறை குஜராத் மாநிலத்தின் முதல்வராக மொரார்ஜி தேசாய் இருந்த காலத்தில் அவரது மகள் மருத்துவக் கல்லூரியில் சேர விருப்பப்பட்டார். ஆனால் அதற்குரிய மதிப்பெண்களை அவர் பெறவில்லை. மொரார்ஜி சொன்னால் மருத்துவ படிப்புக்கான சீட் கிடைத்து விடும் என்று குடும்பத்தினர் சொன்னபோது, அதற்கு அவர் உறுதியாக மறுத்துவிட்டார்.

நான் எப்படி சிபாரிசு செய்யமுடியும். அரசியல் வேறு; குடும்பம் வேறு. எனக்காகவோ, என் குடும்பத்துக்காக என் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு காரியத்தையும் நான் செய்ய மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். அந்த அளவுக்கு பிடிவாதக்காரர்; ஜனநாயகக் கொள்கையில் பிடிப்பு உள்ளவர் மொரார்ஜி. அவர் ஒரு இந்தி வெறியர் என்றுகூட சொல்லலாம். ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களான ஜெயப்பிரகாஷ் நாராயணனும், ஆச்சார்ய கிருபளானியும்தான் இவரை பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர்.

குஜராத் மூத்த தலைவரான சர்தார் வல்லபபாய் படேல் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் மொரார்ஜி தேசாய். மொழிக்காக மொரார்ஜி தேசாய் நடத்திய போராட்டம் அன்றைய அரசியல் சூழலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை முன்மாதிரியாகக் கொண்டுதான் தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிரான போராட்டம் வெடித்தது.

தமிழ்நாட்டில், மூதறிஞர் ராஜாஜி கூட தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து விலகி இந்தி திணிப்பது நல்லதல்ல என்ற கருத்தை முன்வைத்தார். இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் என்னென்ன மொழி பேசுகிறார்கள் என்பதைக் கணக்கெடுத்து அதன்படி மொழி சுதந்திரம் வேண்டும் என்று ராஜாஜி பேசியது எல்லோரையும் கவனிக்க வந்தது.

மேலும், பெரும்பான்மையோர் பேசும் மொழி இந்தி என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவின் வட எல்லையில் இருந்து தெற்கு எல்லை வரை மராத்தி, ஒரியா, தெலுங்கு, கன்னடம், கொங்கன், மலையாளம், தமிழ் என்று அவர்கள் பேசும் வட்டார மொழிகள் வெவ்வேறாக உள்ளன.

வட மாநிலங்களில் இந்தியை பொதுவாக ஏற்றுக் கொண்டாலும், மற்ற மாநிலங்களில் பல மொழிகள் புழக்கத்தில் உள்ளன என்பதை மறந்து விடக் கூடாது. அவற்றுக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அப்போதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்ற சித்தாந்தத்தை நாம் பேணிக் காக்க முடியும்.

இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள், பல்வேறு தேசிய இனங்கள், கலாச்சாரங்கள் எல்லாம் சேர்ந்த ஒரு அற்புதமான வீடு. ஒவ்வொரு மாநில மக்களின் மொழி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல் நாட்டின் ஒற்றுமையும் சீர்குலைந்துவிடக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற தனது கருத்தை ராஜாஜி முன்வைத்தார். இதைப் பற்றியெல்லாம் ‘சுயராஜ்யா’ பத்திரிகையில் விரிவாக எழுதினார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது 1930-ல் அதாவது மறைமலையடிகள், திரு.வி.க., நாவலூர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ்த் தேசியத் தலைவர்கள் காலத்திலேயே எழுந்தது. இந்தி பேசுபவர்கள் பேசலாம், ஆனால் இந்தியை திணிக்கக் கூடாது என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.

தமிழ்த் தேசியத் தலைவர்களில் முதன்மையானவர் வள்ளலார் என்று சொன்னால் அது மிகையல்ல. யாரும் பசிப்பிணியோடு இருக்கக் கூடாது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் வள்ளலார்.

இந்தி திணிப்பு கூடாது என்று நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசிய ஈவிகே சம்பத், அண்ணா தலைமையிலான திமுகவில் இருந்து விலகிய பிறகு தமிழ்த் தேசிய கட்சியைத்தான் தோற்றுவித்தார். தேசிய இனங்களின் கூறு என்பது அந்தந்த மாநில மக்களின் பிரஜா உரிமை, கலாச்சாரத்தைப் பாதுகாப்பதுதானே தவிர பிரிவினை என்பது அல்ல. சுய நிர்ணய உரிமை, தன்னாட்சி என்று சொல்லி தனி நாடு கேட்பது என்பது வேறு; தேசியம் என்பது வேறு. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற மொழிவாரி பிரச்சினைகள் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் உள்ளன. இருந்தாலும் அந்த நாடுகளில் இருந்து இந்தியா தனித்துவமாக உள்ளது என்றால் மிகையல்ல. காரணம் இந்தியாவுக்கு ஏதாவது ஆபத்து என்றால், வடக்கே இமயமலையில் இருந்து தெற்கே முக்கடல் சங்கமிக்கும் குமரி முனை வரை ஓரணியில் எழுந்து நின்று எதிரியை வீழ்த்த கைகோர்ப்பவர்கள் இந்தியர்கள். அப்போது மொழிகள் பார்ப்பதில்லை; இனங்கள் பார்ப்பதில்லை; நாம் இந்தியர் என்ற ஒற்றை கோஷத்தோடு, இந்தியன் என்ற உணர்வோடு அணிவகுத்து மக்கள் நிற்பார்கள்.

பொதுவாகவே இந்தியாவில் பெருவாரியான மக்கள், இந்தியா ஒரு துணைக் கண்டம், அதன் தலைநகர் டெல்லி என்பதில் ஒரே உணர்வோடுதான் இருக்கின்றனர். சுமார் 10 சதவீத மக்கள் மட்டுமே குழுக்களாக இருந்து பிரிவினைக் கோரிக்கைகளை முன்வைத்து கலகங்களில் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு மாகாணங்களில் இத்தகைய குழுக்களைக் காண முடியும்.

பஞ்சாபில் காலிஸ்தான் குழுக்கள் ஒரு காலத்தில் போராடினார்கள். கனடாவில் இருந்துகூட சமீப காலத்தில் காலிஸ்தான் குரல்கள் ஒலித்தன. மராத்தியில் சிவசேனா குழு தமிழர்களுக்கு எதிராகப் போராடினார்கள். ஆனால் காலப்போக்கில் அத்தகையக் குழுக்களும் முனைமழுங்கி வருகின்றன.

தற்போது காலிஸ்தான் கோரிக்கை குறித்து கலவரக் குரல்கள் எழும்போது, பஞ்சாபில் வசிக்கும் மக்களே கூட ‘வேறு வேலையில்லாமல் போராடி வருகிறார்கள்’ என்று புறம்தள்ளுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீரத்தில் 1989 காலகட்டங்களில் பண்டிட்கள் விரட்டப்பட்டனர். தற்போது அங்கு நிலைமை மாறி பண்டிட்கள் மீண்டும் குடியேறி வருகின்றனர்.

ஒருகாலத்தில் மாவோ தீவிரவாதிகள் என்று கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திரைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அவர்களும் கூட இப்போது திருந்தி ஆயுதங்களை ஒப்படைத்து, மக்களோடு மக்களாக இணைந்து வாழத் தொடங்கி விட்டனர்.

நேரு காலத்தில் ஆட்சிக்கு எதிராக எத்தனையோ கட்சிகள் போராடின.

சோசலிஸ்டுகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களில் பல்வேறு கட்சிகள் காங்கிரசுக்கு எதிராகத் தோன்றின. அவசர நிலையை இந்திரா காந்தி பிறப்பித்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டார். ஆனால் அவரை மக்கள் ஜனநாயக முறையில் தேர்தலில் தோற்கடித்தனர். அப்போதும் இந்திய நாட்டின் ஜனநாயகம் வீழ்ந்துவிடவில்லை.

நேருவுக்கு எதிராக எப்படி எதிர்வினைகள் இருந்ததோ அதேபோல் தற்போது மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கும் உள்ளன. இந்துத்துவா என்று குற்றம்சாட்டினாலும், பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும் கூட, நேருவைப் போல் உலக அளவில் பிரதமர் மோடிக்கும் செல்வாக்கு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

எனவே தமிழ்த் தேசியம், மொழிப் பிரச்சினைகள் இந்தியாவில் பலமுறை வடக்கேயும், தெற்கேயும் நடந்துள்ளன. மாநில அதிகாரங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் மத்திய அரசுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன. அப்படி இருந்தும் இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு; அதை சீர்குலைக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம் இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியம், மொழிப் பிரச்சினை என்பது வேறுபட்டது. இலங்கையில் தமிழ்த் தேசியத்தை தொடர்ந்து முன்னெடுத்து வந்த தந்தை செல்வா, அமிர்தலிங்கம் முதல் ஆயுதப் போராளிகளான பிரபாகரன் வரை அவர்களின் ஆரம்பகால நோக்கம் பிரஜா உரிமைதானே தவிர வேறல்ல.

இலங்கையைப் பொறுத்தவரை அந்த மண்ணின் மைந்தர்களான அதாவது வடக்கு, கிழக்கு மாநிலங்கள், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத் தீவு, திரிகோணமலை மற்றும் தென் மாநிலங்களான மட்டக்களப்பு, அம்பாறை வரையுள்ள பகுதிகள் தமிழ் அரசர்கள் ஆண்ட தமிழர் பகுதிகளாகும்.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை பூர்வீகத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என இரு பிரிவு மக்கள் அங்கு வாழ்கின்றனர். இலங்கை பூர்வீகத் தமிழர்கள் (ஈழத் தமிழர்கள்) என்பவர்கள் இலங்கையைத் தங்கள் பாரம்பரிய பிறப்பிடமாகக் கொண்டவர்கள்; இவர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினராகவும், நாட்டின் பிற பகுதிகளில் சிறுபான்மையினராகவும் வாழ்கிறார்கள், பண்டைய காலத்திலிருந்தே அதாவது, குறைந்தது கி.மு. 2-ம் நூற்றாண்டு காலத்தில் இருந்தே இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள், தென்னிந்தியாவிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள். யாழ்ப்பாண ராஜ்ஜியம் மற்றும் வன்னிப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள். பெரும்பாலும் இந்துக்களாகவும், கணிசமான அளவு கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.

இலங்கை மலையகத் தமிழர்கள் என்போர், பிரிட்டிஷா் ஆட்சிக் காலத்தில் அதாவது, 19-20-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக அன்றைய சென்னை ராஜதானியைச் சேர்ந்த ஒன்றுபட்ட திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்ட தமிழ் பேசும் மக்களின் வழித்தோன்றல்கள்; இவர்கள் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர், தேயிலைத் தோட்டத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

1948-ல் பிரிட்டிஷ் காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. அன்றைக்கு இலங்கை சிலோன் என்றுதான் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில்தான் ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட்டது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது தமிழர்களும், சிங்களர்களும் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்று ஆங்கிலேயர்கள் கருதினார்கள்.

ஆனால் சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே சிங்களர்களின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கியது. சேனநாயகா, கொத்தலாவால, பண்டாரநாயகா, ஜெயவர்தனா என சிங்களர்களே ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தனர். தமிழர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் பிரஜா உரிமை கோரியவர்கள் வேறு வழியில்லாமல் பின்னாளில் தனி நாடு கோரிக்கையை முன்வைத்தனர்.

அந்த வகையில் தனி நாடு கோரி காந்திய வழியில் சாத்வீக போராட்டங்களை தந்தை செல்வா முன்னெடுத்தார். கிட்டத்தட்ட 1970 வரைக்கும் போராடிப் பார்த்தார். பலன் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு அமிர்தலிங்கம் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் பிறகு சிங்கள அரசு 9 ஷரத்துகள் அடங்கிய ஒப்பந்தத்தை தமிழர் தலைவர்களுடன் கையெழுத்திட்டனர். ஆனால் காலப்போக்கில் அந்த ஒப்பந்தங்களை குப்பையில் போட்டு விட்டது சிங்கள அரசு. தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் குண்டாந்தடியால் தாக்கப்பட்டு ரத்தக் கறையோடு இலங்கை நாடாளுமன்றத்துக்குச் சென்று குரல் எழுப்பினார்கள்.

அதன் தொடர்ச்சியாகத்தான் இளைஞர்கள் ஒன்றுகூடி, இனி சாத்வீகப் போராட்டத்துக்கு இடமில்லை; ஆயுதப் போராட்டம்தான் நமக்கான தீர்வுக்கு ஒரே வழி என்று ஆயுங்களைக் கையிலெடுத்தார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் ஒன்றுகூடிய இளைஞர்கள் இலங்கை அரசோடு ஆயுதப் போராட்டம் நடத்தத் தொடங்கினர். எனவே இலங்கையில் உள்ள தேசிய கோரிக்கை என்பது வேறு, தமிழ்நாட்டில் நாம் பேசுகின்ற தமிழ்த் தேசியம் என்பது வேறு.

இந்தியாவைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் தமிழ் பேசுகின்ற மக்களுக்கும், உத்தரப்பிரதேசத்தில் இந்தி பேசுகின்ற மக்களும் சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. கலாச்சாரங்கள் வேறுபட்டிருக்கலாம்; பேசும் மொழி வேறுபட்டிருக்கலாம். ஆனால் பிரஜா உரிமை மறுக்கப்பட்டதில்லை.

அதேநேரம் மாநிலங்களுக்கு இடையே உள்ள உரிமைகள் விவகாரத்தில் ஒருமித்த கருத்தோ, ஒற்றுமைப் போக்கோ காணப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்தான். குறிப்பாக கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுடன் நதிநீர் பகிர்வில் தமிழ்நாட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 12 நதிநீர் பிரச்சினைகளுக்கு தமிழ்நாட்டுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை.

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசோடு ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிதான் கர்நாடகாவிலும், கேரளாவிலும் ஆட்சி செய்து வருகின்றன. கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியேற்பு விழாவுக்கு நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

அதேபோல், கேரளாவில் பினராயி விஜயனை அன்போடு ‘சேட்டன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைக்கிறார். அவரோடு நெருங்கிய நட்புடன் இருக்கிறார். அப்படி இருந்தும் நதிநீர் பிரச்சினையில் சுமுகத் தீர்வு எட்ட இயலவில்லை. ஏனெனில் நீதிமன்றத் தீர்ப்புகள் எப்படி இருந்தாலும், தங்கள் மாநிலத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க எந்த மாநிலமும் தயாராக இல்லை.

(தொடர்வோம்...)

‘தமிழ்த் தேசியம்’ பிரிவினைக் கருத்தா? - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 88
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் காமராஜரின் மகத்தான பங்கு - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 87

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in