

பாலியல் குற்ற வழக்குகள், அவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து நீதிமன்ற விசாரணைகளிலும், தீர்ப்புகள் எழுதும்போதும் நீதிபதிகள் பின்பற்ற வேண்டிய சொற்பிரயோகம் குறித்து, கடந்த ஆகஸ்ட் 3 அன்று வெளியான உச்ச நீதிமன்றக் கையேட்டில் சில முக்கியமான பரிந்துரைகள் இடம்பெற்றிருக்கின்றன.
பாலினக் கூருணர்வு மிகுந்த சொற்பிரயோகம் நீதிமன்றங்களில் செயல்படுத்தப்படுவதற்கும் தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்படுவதற்கும் இந்தக் கையேடு துணை நிற்குமா என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கிறது.
வழக்கினால் விளைந்தது
2025 மார்ச் 17 அன்று ஒரு பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், சர்ச்சைக்குரிய வகையிலான கருத்தை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஷ்ரா குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி பயன்படுத்திய சில சொற்களுக்குக் கடும் எதிர்ப்பு உருவான நிலையில், அது தொடர்பாகத் தானாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்தது உச்ச நீதிமன்றம்; அது தொடர்பான விசாரணைகளை அடுத்து, கடந்த பிப்ரவரி 10 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் ரத்துசெய்தது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பக்சி, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு நடத்திய விசாரணையின்போது, ‘உச்ச நீதிமன்றக் கையேடு 2023’ குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிக் காலத்தில் வெளியான அந்தக் கையேட்டில், தகவல்கள் அதிக அளவில் கோட்பாட்டு அடிப்படையிலும் இந்திய நீதி அமைப்பு நடைமுறைகளுடன் பொருந்தாத வகையிலும் இருந்ததாக, தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறிப்பிட்டார்.
இது போன்ற வழக்குகளில் பாலினக் கூருணர்வு கொண்ட சொற்பிரயோகங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைப் பயிற்சியை நீதிபதிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, போபாலில் உள்ள தேசியச் சட்ட ஆணையத்திடம் (NJA) அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் என்ஜேஏ இயக்குநருமான அனிருத்த போஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் பல துறைகள் சார்ந்த ஆளுமைகள் இடம்பெற்றிருந்தனர்.
‘தீர்ப்புகளும் பாலினமும்: தீர்ப்புகள் எழுதுவதில் கூருணர்வும் கனிவும்’ என்னும் தலைப்பில் இக்குழுவினரின் அறிக்கை (கையேடு) வெளியாகியிருக்கிறது.
நீதியின் மொழியில்...
ஒரே மாதிரியான பொதுக்கண்ணோட்டத்தில் அமைந்த நீதிமன்ற அவதானிப்புகள், பாலியல் குற்றங்கள் குறித்துப் புகார் தெரிவிக்கவிடாமல் பாதிக்கப்பட்டவர்களைத் தடுக்கக்கூடும்; முன்முடிவுகளை வலுப்படுத்துவதாக அமையும்; நீதியமைப்பின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கக்கூடும் என்று இந்தப் புதிய அறிக்கை எச்சரிக்கிறது.
இதற்கு முன்னர் ‘பாலினப் பொதுக்கண்ணோட்டங்களை எதிர்கொள்வதற்கான கையேடு’ என்னும் தலைப்பில் வெளியான 2023 உச்ச நீதிமன்ற அறிக்கை, நீதிபதிகள் தவிர்க்க வேண்டிய சொற்பிரயோகங்களைச் சுட்டிக்காட்டியிருந்தது; நீதிபதிகள் பாலினப் பொதுக்கண்ணோட்டங்கள், ஆணாதிக்க மொழியை இனம்கண்டு தவிர்ப்பதில் கவனம் செலுத்த அது உதவியது.
பேச்சுவழக்கு சார்ந்த, காலாவதியான சொற்பிரயோகங்களுக்குப் பதிலாக நடுநிலையான, சட்டரீதியாகப் பொருந்துகிற துறைசார்ந்த சொற்களைப் பயன்படுத்தப் பரிந்துரைத்தது.
எடுத்துக்காட்டாக, ‘ஈவ் டீசிங்’ என்பதற்குப் பதிலாக ‘தெருப் பாலினத் துன்புறுத்தல்’ என்றோ, ‘ஹவுஸ்வொய்ஃப்’ என்பதற்குப் பதிலாக ‘ஹோம்மேக்கர்’ என்றோ, ‘கள்ளக்காதலி / விபச்சாரி’ என்பதற்குப் பதிலாக ‘திருமணத்தை மீறிய உறவு கொண்ட பெண்’ என்றோ குறிப்பிடலாம் என்றது. என்றாலும், அதிலிருந்து பலவிதங்களில் புதிய அறிக்கை வேறுபட்டிருக்கிறது.
புதிய கையேட்டில் ‘prosecutrix’ என்பதற்குப் பதிலாகப் பாதிக்கப்பட்டவர் (victim), பாதிப்பிலிருந்து மீண்டவர் (survivor), புகார்தாரர் (complainant) என்கிற சொற்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன; இந்தச் சொற்கள் நீதிமன்றத்தை நாடுவோரின் நேரடி அனுபவங்களையும் இயல்பான சூழலை அங்கீகரிப்பதாகவும் உள்ளன.
பாலியல் வன்முறையை ஒழுக்கம், கற்பு, கௌரவம் ஆகிய கண்ணோட்டங்களின் வழியே நோக்கும் மொழியை நீதிமன்ற ஆவணங்களில் இருந்து நீக்கச் சொல்கிறது.
மேலும், வேறுபட்ட பாலியல் விருப்பங்கள், பாலின அடையாளங்களைக் குறிப்பிடுகையில் நீதிமன்றங்கள் மரியாதையான, சமகாலத்துக்கு ஏற்ற சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தப் புதிய கையேடு வலியுறுத்துகிறது; பாலியல் விருப்பம், பாலின அடையாளம், பாலியல் வெளிப்பாடும் பண்புகளும் (SOGIESC) குறித்து உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கட்டமைப்பை இது பரிந்துரைக்கிறது.
நீதிமன்ற மேலாண்மை, பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பு, நீதிசார் பகுப்பாய்வு, பாதிக்கப்பட்டவரின் வேதனைகளைக் கணக்கில்கொள்ளும் தீர்ப்பு உள்ளிட்ட நடைமுறை சார்ந்த சீர்திருத்தங்களை இது பரிந்துரைக்கிறது.
நீதிமன்ற நடைமுறைகளில் மாற்றம்
நீதியமைப்பில் பின்பற்ற வேண்டிய மொழிநடையைத் தாண்டி, ‘கனிவான நீதிமன்ற நடைமுறைகளை’யும் நீதிபதிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா, 2023இன் கீழ் பாலியல் வல்லுறவு, இதர பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் (தனியாக, மூடிய அறைக்குள் விசாரணை) விசாரணைகள் பொதுவாக ஒளிப்படக்கருவி முன்பாக நடத்தப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் கட்டாயம் காக்கும் வகையில் அவரது முதலெழுத்துகள் அல்லது புனைபெயர்கள் மட்டுமே நீதிமன்ற விசாரணைகளில், கோப்புகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறது.
கண்ணியக்குறைவான, கீழ்த்தரமான அல்லது அவதூறுகளுக்கு உள்ளாக்குகிற கேள்விகள் குறுக்கு விசாரணையின்போது சாட்சிகளிடம் கேட்கப்படுவதைத் தடைசெய்யும் பாரதிய சாட்சிய அதினியம் சட்ட விதிகளை நீதிபதிகள் கண்டிப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்டவரின் முந்தைய பாலியல் விருப்பங்கள் சார்ந்த விஷயங்கள் வழக்கு விசாரணையில் பொருட்படுத்தத்தக்கதல்ல என்றும் வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்டவரின் மன பாதிப்புகளைக் கருத்தில் கொள்ளும் அணுகுமுறைக்கு முக்கியத்துவம் தருகிறது.
குற்றத்தைத் தாமதமாகப் புகார் செய்வதோ, உடல் காயங்கள் இல்லாதிருப்பதோ, வாக்குமூலங்களில் தெளிவு இல்லாமல் இருப்பதோ, பாதிக்கப்பட்டவரின் கடந்த காலப் பாலியல் வாழ்க்கை சார்ந்து பாதிக்கப்பட்டவருக்கு எதிரான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும்; அதிர்ச்சிகரமான நிகழ்வுகளில் ஒவ்வொருவரும் எதிர்வினையாற்றுவதில் வேறுபாடுகள் இருக்கும் என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
பாதிக்கப்பட்டவர் நீதிமன்ற நடைமுறைகளை எதிர்கொள்வதில் இருக்கும் பதற்றத்தைக் குறைக்க ஆலோசனைச் சேவை அவருக்கு வழங்கப்படுவதையும் ஊக்குவிக்கிறது.
பாலியல் குற்ற வழக்குகளில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் / இளஞ்சிறார்களுக்கு இணக்கமான ஒரு மொழி சார்ந்த சூழலமைப்பையும் கனிவான குற்றவியல் நீதி அமைப்பையும் உருவாக்கித் தர இது விழைகிறது. இதன் மூலமாக, நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் எதிர்காலத்தில் சிறப்பான விளைவுகள் உருவாக வேண்டும்!