பருவமழையைத் தழுவிக்கொண்ட காவிரிப் படுகை

காவிரிப் படுகை பெரிய மாற்றத்தின் விளிம்பில் உள்ளதை இந்த ஆண்டின் பருவமழை காட்டியுள்ளது
பருவமழையைத் தழுவிக்கொண்ட காவிரிப் படுகை
Updated on: 
3 min read

மாதப் பிறப்போடு ஐப்பசியில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழைக்குச் சம்பா பட்டத்தின் நெல் சாகுபடி தப்பிக்குமா என்று காவிரி விவசாயிகள் கவலைப்படுவதுதான் வழக்கம். வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு சம்பா சாகுபடி அந்தப் பருவமழையால்தான் சாத்தியப்பட்டது.

செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 45 நாள்களுக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதாக அரசாங்கத்தின் அறிவிப்பு. அந்தக் கணிப்பை மெய்ப்பிப்பதுபோல் அக்டோபர் 14 ஆம் நாள் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஆனைக் கரியாகப் படர்ந்திருந்த வானத்தில் பஞ்சுத் திவலைபோல் வெளிறிய மாசி தாழப் பறந்தது. பருவமழையின் வரவுக்கு அதுவே அடையாளம்.

புழுதி உழவில் முளைக்காமல் கிடந்த விதை முளைகண்டது. முந்தைய மழையில் முளைத்துக் கருகத் தொடங்கிய நாற்றுக்கு உயிர்த் தண்ணீர் கிடைத்து, பச்சைபிடித்தது. தண்ணீருக்கு உத்தரவாதம் இல்லாமல் எப்படி விதைப்பது என்று மருகிக்கிடந்தவர்கள் விதைக்கத் தொடங்கினார்கள். இந்த ஆண்டு பருவமழையால் கல்லணைக்குக் கீழே சாத்தியமான மொத்த சம்பா பரப்பு கிட்டத்தட்ட 9.5 லட்சம் ஏக்கர்.

நிலத்தடி நீருக்கான வரைபடம்

சம்பாவுக்கு இணைப் பட்டமாக, குறுவைக்குப் பின்னால் வரும் தாளடியின் கணக்கு வேறு. கல்லணைக்குக் கீழேயுள்ள காவிரிப் படுகை மாவட்டங்கள் நான்கிலும் இந்த ஆண்டு குறுவைப் பரப்பு மொத்தம் 3,76,500 ஏக்கர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சென்ற ஆண்டைவிட 3,600 ஏக்கர் கூடுதல். எவ்வளவு பரப்பில் இந்த ஆண்டு குறுவை சாத்தியப்பட்டதோ அதற்கு நிலத்தடி நீர் மட்டுமே உதவியது என்று கொள்ள வேண்டும்.

காவிரிப் படுகையில் எங்கெல்லாம் நிலத்தடி நீர் உதவுகிறது என்பதற்கு வேறு ஆய்வு வேண்டாம்; நடப்பு ஆண்டின் குறுவைப் பரப்பே அதற்குத் துல்லியமான வரைபடம்.

நான் பருவமழை, நிலத்தடி நீர் என்கிற இரண்டைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். செப்டம்பரில் திறந்த மூன்றாவது ஆதாரமான மேட்டூர் நீர் எவ்வளவு உதவியது என்று நீங்கள் கேட்கலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in