

ஃபிரெஞ்சு தத்துவ ஆசிரியர் மிஷேல் ஃபூக்கோவின் (1926-1984) சிந்தனைகள் சமகால வாழ்வைப் புரிந்துகொள்ள இன்றியமையாதவை. குறிப்பாக பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு மானுடச் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பல்வேறு களங்களில் ஆராய்ந்தவர் ஃபூக்கோ.
மனநோய், மனநலன் குறித்த சிந்தனைகளும் சிகிச்சை முறைகளும் எப்படி மாற்றமடைந்தன, தண்டனை குறித்த சிந்தனைகள் எப்படி மாற்றமடைந்தன, நோய் சிகிச்சை குறித்தான சிந்தனைகள் எப்படி மாற்றமடைந்தன, அறிதல் குறித்த - பாலியல் குறித்த சிந்தனைகள் எப்படி மாற்றமடைந்தன எனப் பல்வேறு களங்களில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்வதன் மூலம் சமகாலத்தில் ஒரு மானுடத் தன்னிலையின் கட்டமைப்பு எப்படி நிகழ்கிறது என்பது குறித்த சிந்தனைகளைக் கூர்மைப்படுத்தியவர்.
வரலாற்றுத் தோற்றவியல்
அவருடைய சிந்தனைகளைத் தொகுத்து நோக்கும்போது, அதன் முக்கியமான பங்களிப்பு - மானுட சாராம்சம் என்பதற்கு நித்தியமான பொருள் எதுவும் கிடையாது என்பதும், இன்றைக்கு நாம் யாராக இருக்கிறோம் என்பதே அறிய வேண்டியது என்பதுமாகக் கூறலாம்.
இன்னும் சரியாகச் சொன்னால், ‘நான் யார்?’ என்கிற கேள்வி தோற்றவியல் சாராம்சத்தைக் கோரக்கூடிய கேள்வியாக இருக்கலாம். ஆனால், அந்தக் கேள்விக்கான பதில் வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும் புதிதாக உருவாகிறது. அதைத்தான் ஃபூக்கோ, ‘நம்முடைய வரலாற்றுத் தோற்றவியல்’(historical ontology of ourselves) என்று கூறுகிறார்.
வரலாறு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு பொதுவான விளக்கத்துக்கு உட்பட்ட காரணக் காரியத் தொடர்ச்சியாக வரலாற்றை ஃபூக்கோ காண்பதில்லை.
மார்க்ஸ், ஃபிராய்டு ஆகிய பெயர்களை ஆசிரியத்துவச் செயல்பாட்டின் (author function) பல எழுத்தாளர்களை உருவாக்கும் சொல்லாடல் களங்களை உருவாக்கிய பெயர்களாக அவர் கூறினாலும், எந்த ஒரு குறிப்பிட்ட விளக்கத்தின் அடிப்படையிலும் வரலாற்றைத் தொகுப்பது முழுமையாகாது என்றே கூறுகிறார்.
வரலாறும் வழித்தடமும்
வரலாறு (history) என்பதற்கு மாற்றாக வழித்தடம் (geneology) என்பதை அவர் முன்னிறுத்துகிறார். ஜீனியாலஜி என்பது ஜீன் என்கிற மரபணுவை மையமாகக் கொண்டது. தமிழில் ‘அரசின் வம்சாவளியியல்’ என்று எழுதினால், அது பொருள் மயக்கத்தைத் தரும். இதற்குக் ‘கால்வழி மரபு’ என்பன போன்ற சொல்லாக்கங்களும் உள்ளன. இதை எளிமையாக வழித்தடம் எனலாம்.
ஒரு குறிப்பிட்ட நோக்குநிலையிலிருந்து அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து விளக்குவது வரலாறு. அரசு உருவாக்கம் என்கிற அடிப்படையிலிருந்தோ, வர்க்கப் போராட்டம் என்கிற அடிப்படையிலிருந்தோ அவ்வாறு தொகுக்கலாம்.