மேகேதாட்டு பிரச்சினையும் தமிழக விவசாயிகளின் புரிதலும்

காவிரி விவசாயி கேட்பது ஒரு பிரபஞ்ச நெறியின் அடிப்படையிலானது
மேகேதாட்டு பிரச்சினையும் தமிழக விவசாயிகளின் புரிதலும்
Updated on
3 min read

மேட்டூர் அணையைப் போல் கிட்டத்தட்ட முக்கால் பங்கு தண்ணீர் தேக்கும் அணை ஒன்றை காவிரியின் குறுக்கே, மேகேதாட்டு என்ற இடத்தில் கட்டுவதற்கு கர்நாடகம் திட்டமிடுகிறது. மிகவும் சிக்கலான பிரச்சினைக்கு ஏற்ற தீவிரத்தோடு இதனை வல்லுநர்கள் விவாதிக்கிறார்கள்.

அணைகளையே பார்த்திராத பெரும்பாலான காவிரிப் படுகை விவசாயிகளும் இந்தப் பிரச்சினையைத் தங்கள் பாசன மரபு வழியாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். பிரச்சினை பற்றிய நீரியல் நிபுணர்கள், சட்ட வல்லுநர்களின் புரிதல் உரிய மன்றங்களில் வாதாட உதவும்.

காவிரி விவசாயிகளின் புரிதல் எதற்கு உதவும், அதை எந்த அவையில் எடுத்துச்சொல்லலாம் என்று நீங்கள் கேட்கக்கூடும். வல்லுநர்களின் சம்பிரதாய மொழிக்கு இன்னும் அகப்படாத சிந்தனை மரபுகளும் உண்டு. அம்பலம் ஏறும் அந்தஸ்து அதற்கு இல்லை என்றாலும், பொதுவான புரிதலுக்குத் தெளிவையும் ஆழத்தையும் அது நமக்குத் தரலாம்.

ஆயக்கட்டு இல்லாத அணை

காவிரிப் படுகை விவசாயிகளுக்கு மதகுகள், வாய்க்கால் தலைப்புகள் பழக்கம். ஒவ்வொன்றுக்கும் கீழ்மடையில் அதன் ஆயக்கட்டு இருக்கும். ‘ஆயக்கட்டு’ என்பது ஒரு வாய்க்கால் அல்லது ஆற்றினால் பாசனம் பெறும் நிலப்பரப்பு.

உத்தேச மேகேதாட்டு அணையிலிருந்து தமிழக எல்லை நான்கு கி.மீ. அந்த அணைக்குக் கீழே கர்நாடகத்துக்கு ஆயக்கட்டு இருக்க வழியில்லை. ஆயக்கட்டே இல்லாமல் 67.14 டி.எம்.சி (ஒரு டி.எம்.சி. - 100 கோடி கன அடி) தேக்கிவைக்கும் அணை காவிரி விவசாயிக்கு வீம்பு வேலையாகத் தோன்றும். 18 லட்சம் ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு உள்ள மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.47 டி.எம்.சி. தான்.

மேகேதாட்டுவின் ஆயக்கட்டு தமிழகத்தில் இருக்கிறது என்று கர்நாடகம் சொல்லுமானால், அது இன்னும் மோசமான வாதம். நம் ஆயக்கட்டின் பாசனத்தை மேகேதாட்டு மூலம் முற்றிலுமாகக் கர்நாடகம் தன் கைக்குள் கொண்டுவருகிறது.

காவிரி விவசாயிகள் தங்கள் பாசன வாய்க்காலின் மதகு நிர்வாகத்தை இன்னொரு கிராமத்தாரிடம் விடமாட்டார்கள். தமிழக எல்லைக்குள் காவிரி வருவதற்கு முன் அதன் போக்கில் அமையும் கடைக்கோடி அணையாக மேகேதாட்டு அமைய வேண்டும் என்பது கர்நாடகத்தின் திட்டம்.

காவிரிப் படுகை விவசாயிகள் வாய்க்காலின் கடைக்கோடியில் கவணை போட்டுக்கொள்வது வழக்கம். ‘கவணை’ என்பது ஒரு தற்காலிகத் தடுப்பு. இது வடிகாலின் கோடியில் இருக்கும்; பொதுவாகப் பாசன வாய்க்காலின் குறுக்கே இருக்காது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in