

இந்தியா விடுதலை பெற்ற பின்பு 1948இல் மதராஸ் பொது நூலகச் சட்டம் (Madras Public Libraries Act) ஓமந்தூர் ராமசாமி முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. இதுவே சுதந்திர இந்தியாவில் பொது நூலகங்களுக்காக இயற்றப்பட்ட முதல் சட்டம்.
1972இல், பொது நூலக இயக்குநரகத்தை உருவாக்கி, நூலக இயக்ககத்தைப் பெரிதும் விரிவுபடுத்தியதோடு மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் நூலக ஆணைக் குழுக்களை நிறுவி ஏராளமான நூலகங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு.
தற்போது, கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் எனத் தமிழ்நாட்டில் 4,600க்கும் மேற்பட்ட நூலகங்கள் பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
சிறப்பு நூலகங்கள்
சிறப்பு நூலகங்களான அண்ணா நூற்றாண்டு நூலகம் 2010ஆம் ஆண்டிலும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் 2023ஆம் ஆண்டிலும் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.
இது தவிர, கோவையில் பெரியார் பெயரிலும், திருச்சியில் காமராஜர், நெல்லையில் காயிதே மில்லத், சேலத்தில் பாரதிதாசன், கடலூரில் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயரிலும் சிறப்பு நூலகங்கள் (அறிவுலகம்) அமைப்பதற்குக் கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதில் கோவை பெரியார் நூலகத்தின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு முறையாகத் திறக்கப்படுவதற்கு அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
பொது நூலகங்களின்கீழ் இயங்கும் நூலகங்களில் பணிபுரியும் நூலகர்களுக்குப் பணி விதிகளை முறைப்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய பணி விதிகள் சார்ந்து அதிக அளவில் நீதிமன்ற வழக்குகள் உள்ளதால், இவ்வழக்குகளைத் தவிர்ப்பதற்குப் பொது நூலகச் சட்டம் 1948/விதிகள் 1950இல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளவும் பொது நூலகங்களில் உள்ள அனைத்துப் பணியிடங்களிலும் பணி விதிகளை முறைப்படுத்துவது அவசியம் எனக் கருதப்பட்டது.