

பெண்களின் சுயமரியாதை, தொழில் சுதந்திரம், தாய்மைப் பொறுப்புகளைப் போற்றும் வகையில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது (பல் சிகிச்சை நிபுணரான மனைவி எதிர் ராணுவ லெப்டினென்ட் கர்னல் கணவருக்கு இடையிலான விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மே 12ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு).
தகுதியும் திறமையும் கொண்ட ஒரு பெண் தனது தொழில் வாழ்க்கையைத் தொடரவும், தனது குழந்தைக்குப் பாதுகாப்பான, நிலையான வளர்ச்சிச் சூழலை உருவாக்கவும் மேற்கொண்ட முயற்சியை, கீழமை நீதிமன்றங்கள் ‘கொடுமை’, ‘குடும்பத்தைக் கைவிடுதல்’, ‘குடும்பப் பொறுப்பின்மை’ எனப் பொருள்படுத்தியிருந்தன.
இதைக் கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம், பெண்களின் உரிமைகள் குறித்துத் தெளிவான சில வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு இன்றைய வேலைக்குச் செல்லும் பெண்களுக்குச் சட்டரீதியாக மட்டுமல்ல, சமூகரீதியிலும் உளவியல்ரீதியிலும் முக்கியமான பாதுகாப்பை வழங்குகிறது.
ஒரு பெண் தனது கல்வி, தொழில், தனித்துவமான அடையாளத்தைத் தொடர்வது திருமணத்துக்கு எதிரான செயல் அல்ல என்பதை இது தெளிவுபடுத்துகிறது. ஒரு பெண், மனைவியாக இருப்பதற்கு முன் அவர் ஒரு மனிதர்; அவருக்குத் தனது அறிவு, கனவு, தொழில், எதிர்காலத்தின் மீது முழுமையான உரிமை உண்டு. திருமணம் என்பது அந்த உரிமைகளைப் பறிக்கும் ஒப்பந்தமல்ல என்பதை இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது.
சவால்கள்
ஒருகாலத்தில் குடும்பம், திருமணம் என்கிற எல்லைக்குள் பெண்களின் வாழ்க்கை அடைக்கப்பட்டிருந்தது. இன்று பெண்கள் வெறும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக மட்டுமல்ல, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவும், தங்களுக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ளவும் உழைக்கிறார்கள்.
பொருளாதாரச் சுதந்திரம், அறிவுசார் வளர்ச்சி, சமூகப் பொறுப்பு, தனித்துவமான அடையாளம் ஆகியவற்றை உருவாக்கும் பயணத்தில் பல்வேறு சவால்களை அவர்கள் கடக்கின்றனர். நீண்ட காலக் கல்வி, கடுமையான பணிச்சுமை, தொடர்ச்சியான திறன் மேம்பாடு, குடும்ப / சமூக எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைச் சமாளித்தே அவர்கள் முன்னேறுகின்றனர்.
பல நேரங்களில் அவர்களின் முடிவுகள் நிறுவனங்களின் எதிர்காலத்தையும் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய பெண்களின் வளர்ச்சிக்குக் குடும்பம் தடையாக இருக்கக் கூடாது என்பதையே உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது. அதேநேரத்தில், இந்தத் தீர்ப்பு பெண்கள் மத்தியில் இணையர் தேர்வு குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது.