

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் ஆபாச, ஆள்மாறாட்ட டிஜிட்டல் உள்ளடக்கங்கள் பகிர்ந்துகொள்ளப்படுவதைத் தடுக்க ‘தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகள் 2026’ பிப்ரவரி 20 முதல் நடைமுறைக்கு வருகிறது.
பின்னணி என்ன? - டிஜிட்டல் உலகின் புதிய புரட்சி ஏஐ தொழில்நுட்பம். இதன் மூலம் உருவாக்கப்படும் செயற்கை ஓவியங்கள், காணொளிகள், ஒலி வடிவங்கள் கடந்த சில ஆண்டுகளாகப் பிரபலமாகிவருகின்றன.
இதனிடையில் ஏஐ-யைப் பயன்படுத்திச் சிறாரை ஆபாசமாகச் சித்தரிக்கும் 3,200க்கும் அதிகமான ஒளிப்படங்கள் ஏஐ-யின் பிரம்மாண்டத் தகவல் கிடங்கில் சட்டவிரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை ஸ்டான்ஃபோர்டு, இணையக் கண்காணிப்பகம் கடந்த 2023இல் கண்டெடுத்தது.
தவிர, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட 580 கோடிக்கும் அதிகமான போலி ஒளிப்படங்கள் இணையத்தில் உலவும் அதிர்ச்சித் தகவலை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்தக் கண்காணிப்புக் குழு வெளியிட்டது.
ஏஐ கொண்டு வடிவமைக்கப்படும் டீப்ஃபேக் ஒளிப்படங்கள், காணொளிகள் தத்ரூபமாகவும், உண்மையான தோற்றத்துக்கு நெருக்கமாகவும் இருப்பதால், அவை கூடுதல் ஆபத்தானவை என்பதும் வலியுறுத்தப்பட்டது.
உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் அவசர கதியில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவசியத்தை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்தின.
ஏற்கெனவே, இந்தியாவில் சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள், டிஜிட்டல் செய்திகளுக்குப் பொறுப்புடைமை, பயனர் புகார் தீர்வு, பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்குதல் முதலானவற்றுக்குத் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 நடைமுறையில் உள்ளது. ஆனால், இதில் ஏஐ தொழில்நுட்பப் பயன்பாட்டை நெறிப்படுத்தும் விதிகள் இணைக்கப்படாமல் இருந்தன.