

இத்தொகுப்பில் கேரளாவின் முக்கியமான படைப்பாளிகள் பலர் இடம்பெற்றுள்ளனர். இதில், ஆனந்த்தின் ‘நான்காவது ஆணி’ சிறுகதை மிகமிக வித்தியாசமானது.
டான் பிரவுனின் ‘டாவின்சி கோடு’, பேர் லாகர் குவிஸ்டுவின் ‘பாரபாஸ்’ போன்றவற்றில் பைபிள்மாந்தர் சிலரின் வழியே, தொன்ம நிகழ்வுகளின் புதிய கோணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றால், ஆனந்த்தின் இக்கதை, இயேசு சிலுவையில் அறையப்பட்ட சம்பவங்களின் வழியே, சிலுவைக்கான ஆணிகளைத் தயாரித்த நாடோடிக் கொல்லனின் பார்வையிலிருந்து புதிய வாழ்க்கை ஒன்றைப் பேசுகிறது.
நிகழ்தகவின் பல வாய்ப்புகளில் இன்னுமொரு அரிதான வாய்ப்பாக மிளிர்கிறது இச்சிறுகதைப் பிரதி. பஷீரின் ‘முதல்முத்தம்’ எளிய காதலை மையப்படுத்துகிறது. பெண்ணொருத்தியின் அன்பைப் பெற நினைக்கும் இளைஞன், சிறுகதைகள் எழுதி அவளிடம் படிக்கக் கொடுக்கிறான்.