

கலையும் இலக்கியமும் மனித உணர்வுகளின் உன்னதமான வெளிப்பாடுகள்; எனவேதான், அவை தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்துக்கு உட்படாத இறுதி எல்லைகளாகக் கருதப்பட்டன.
ஆனால், மார்செல் ப்ரௌஸ்ட்டின் ‘இழந்த நேரத்தைத் தேடி’ போன்ற உலகப் புகழ்பெற்ற, அடர்த்தியான செவ்வியல் நாவல்களின் மொழிபெயர்ப்பிலும் கணினி உதவி மொழிபெயர்ப்பு (CAT) கருவிகளும், ChatGPT, DeepL போன்ற செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பொறிகளும் ஊடுருவியிருப்பது இன்று உலகளாவிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மொழிபெயர்ப்பாளர்களில் பலரும் இத்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வரலாற்றுச் சான்றுகள் மற்றும் கலைச்சொற்களைத் தேடும் சலிப்பூட்டும் வேலைகளை ஏஐ நொடிப் பொழுதில் செய்து முடிப்பதால், மொழிபெயர்ப்புப் பணியின் சுமை குறைவாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனினும், ஏஐ தொழில்நுட்பத்தில் இவ்வளவு வசதிகள் இருந்தாலும், அது இலக்கியத்தின் சாரத்தை அடைந்துவிட்டதா என்றால் நிச்சயமாக இல்லை.
ஏஐ என்பது புத்திசாலி குழந்தைதான்; ஆனால் அது முழுமையான புத்திசாலி அல்ல என்பது அதைவிட உண்மை. இல்லாத தகவல்களையும், தவறான தரவுகளையும் மிக நம்பிக்கையான தொனியில் புனைந்து தருவதில் ஏஐ கைதேர்ந்தது. ஆகவே, ஏஐ கருவி தரும் தகவல் சரிதானா என்பதை உறுதிப்படுத்த மனிதர்களின் மேற்பார்வை கட்டாயம் தேவை.