

சந்திப்புகளின் தொடர்ச்சிதான் வாழ்க்கை. சில சந்திப்புகள் கடைசிவரை நினைவில் நீடித்திருக்கும். சில சந்திப்புகள் பாதி வழியில் பின்தங்கிவிடும். சில சந்திப்புகள் நிகழாமல் இருந்திருக்கலாம் என்று யோசிக்க வைக்கும்.
சில சந்திப்புகள் இன்னும் நெருக்கமானதாக அமைந்திருக்கலாம் என்று பிற்காலத்தில் ஏங்கவைக்கும். அப்படி ஏங்கவைத்த சந்திப்புதான் டாக்டர் பி.எச்.டானியலுடன் ஏற்பட்டது. அவர் யார் என்று தெரியாமல் நிகழ்ந்த தற்செயலான சந்திப்பு, அவரை அறிந்துகொண்ட பின்னர் இன்றுவரை விலகாத ஆதங்கமாக ஞாபகத்தில் நீடித்திருக்கிறது.
பணியும் பயணமும்
பட்டப்படிப்பை முடித்த சில நாள்களுக்கு உள்ளாகவே எனக்கு வேலை கிடைத்தது. உள்ளூரில் ஒரு சிறு தொழில் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதி வேலை. சொற்ப ஊதியம்தான் என்றாலும் கைக்காசைச் செலவழிக்காமல் ஊர் சுற்றும் வாய்ப்பைத் தரும் என்பதால் மகிழ்ச்சியாகப் பணியில் அமர்ந்தேன்.
பின்னர், அதைவிடவும் பெரிய நிறுவனத்தில், அதிக ஊதியத்தில் வேலை கிடைத்தது. உடனே ஒப்புக்கொண்டேன். தெரிந்த இலக்கியவாதிகளைச் சந்திக்க உதவும் என்பதுதான் காரணம். பின்னர், பத்திரிகையாளனாகப் பணியேற்பதுவரையான ஆண்டுகளில் நான்கு நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதியாகவே பணியாற்றி இருக்கிறேன்.
இலக்கியவாதிகளையும் அபிமானக் கலைஞர்களையும் தேடித் தேடிப் போய்ச் சந்திக்க வாய்த்தது. வேலைப் பகுதியாக ஒதுக்கப்பட்டவை நான்கு தென் மாநிலங்கள்.
எனவே, மொழியைக் கடந்த சந்திப்புகளும் தாராளமாக வாய்த்தன. வேலை நிமித்தமாகச் சென்ற சிற்றூர்களும் பெரு நகரங்களும் இடத்தால் அல்ல; அனுபவங்களாலேயே இப்போதும் நினைவில் தங்கியிருக்கின்றன. மலையூரான வால்பாறை அவற்றில் ஒன்று.
ஆர்தர் மில்லரின் வாசகர்
காப்பி, தேயிலை எஸ்டேட்டுகள் நிறைந்த பகுதி வால்பாறை. சின்ன ஊர். அமோக விற்பனைக்குச் சாத்தியமில்லாத ஊர். அடுத்த சமவெளிப் பகுதியான பொள்ளாச்சிதான் வணிக மையம். எங்கள் நிறுவனத்துக்கு வால்பாறையில் முகவர் இருந்தார்.