

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தின் எதிரொலியாக, மாநிலம் முழுவதும் உள்ள இத்தகைய தொழிற்சாலைகளில் தமிழக அரசு அண்மையில் சோதனை நடத்தியது வரவேற்கத்தக்கது. தொழிலாளர்களின் பாதுகாப்பில் ஆலைகள் கவனம் செலுத்துவது தடையின்றித் தொடர்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
ஜூன் 21 அன்று, கன்னிகைப்பேரில் உள்ள இந்தத் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு, 19 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மீன், இறால் போன்றவற்றைப் பதப்படுத்தப் பனிக்கட்டிகளை உருவாக்குவதற்கு உலர் அமோனியாவை (என்எச் 3) கையாளும் குளிர்பதன அமைப்பின் வால்வு செயலிழந்ததால், அமோனியா கசிந்ததும் தொழிலாளர்கள் உள்ளேயே தங்க வைக்கப்பட்டிருந்ததும் விபத்துக்கு அடிப்படைக் காரணங்கள் எனத் தெரியவந்தது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பிற கடல் உணவு பதப்படுத்தும் ஆலைகள், உள்ளே தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை அமோனியா சேமிக்கும் கட்டமைப்பிலிருந்து பாதுகாப்பான தொலைவுக்கு அடுத்த மூன்று நாள்களில் மாற்ற வேண்டும் எனத் தொழில் பாதுகாப்பு - சுகாதார இயக்குநரகம் உத்தரவிட்டது.
அனைத்துப் பரிமாணங்களிலும் பாதுகாப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என அறிந்துகொள்ளும் நோக்கத்தோடு பல வினாக்களுக்குத் தொழிற்சாலைகள் எழுத்துபூர்வமாகப் பதில் அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.