

நாடாளுமன்றத்தில் மார்ச் 2026இல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் திருநர் உரிமைகள் குறித்துப் பல புதிய அச்சங்களை உருவாக்கியுள்ளது. ஆனால், இந்தச் சூழலிலும் தமிழ்நாடு அரசு தனக்கு உள்ள சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, திருநர் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாக்க முடியும்.
திருத்தமும் அதிகாரமும்
திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019இல் இந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தம் மூன்று முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. முதலாவதாக, திருநர் என்பதற்கான சட்ட வரையறை குறுகியதாக மாற்றப்பட்டுச் சில குறிப்பிட்ட சமூக - பண்பாட்டு அடையாளங்களுக்குள் சுருக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, திருநர் என்கிற அடையாளச் சான்றிதழையோ, ஆண் அல்லது பெண் என்கிற பாலினச் சான்றிதழையோ பெறுவதற்கான நடைமுறை மருத்துவப் பரிசோதனைகளை அதிகம் சார்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள சில குற்றப்பிரிவுகள் தெளிவற்றும் மிக விரிவாகவும் இருப்பதால், ஜமாஅத் அமைப்புகள்(திருநர் சமூகத்தினர் தங்களுக்கு இடையே நடத்தும் பொதுவான அமைப்பு), ஹிஜ்ரா கரானாக்கள்(திருநர் சமூகம் தங்கும் இடம்), திருநர், பால்புதுமையர்(queer) மக்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் செயல்பாடுகள்கூடக் குற்றமாக்கப்படும் அபாயம் உள்ளது.
ஆனால், இந்தத் திருத்தத்துக்குப் பிறகும் மாநில அரசுகளுக்கு முக்கியமான அதிகாரங்கள் உள்ளன. திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019இன் பிரிவு 22, சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விதிகளை உருவாக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
மேலும், ‘நால்ஸா (NALSA) எதிர் இந்திய ஒன்றியம்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்த சுய பாலின அடையாளம், கண்ணியம், சமத்துவம் போன்ற அடிப்படை உரிமைகளும் தொடர்ந்து பொருந்துகின்றன.
தெளிவு அவசியம்
இந்த இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு குறைந்தபட்சம் சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முடியும்.
2026 திருத்தச் சட்டம் திருநங்கை என்பதற்கான வரையறையைச் சுருக்கி, அதற்குள் சில குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளை மட்டுமே குறிப்பிடுகிறது.