

“நெல்லை சதி வழக்கில் கைதுசெய்த என்னை போலீஸார் டோணாவூரிலிருந்து களக்காடு செல்லும் சாலையில் கொண்டுசென்றார்கள். போகிற வழியில் வண்டியை நிறுத்திக் கீழே தள்ளிவிட்டார்கள். கீழே கிடந்த என்னை பூட்ஸ் கால்களால் மிதித்தார்கள். எரிகிற சிகரெட்டால் என் மீசையைப் பொசுக்கினார்கள். பொறுக்க முடியாத வலி. ஆனாலும், நான் எதுவும் பேசவில்லை.
சித்ரவதைகள் மேலும் மேலும் அதிகமாயின. காவல் நிலையம் கொண்டுபோனார்கள். அதிகாலை 2 மணிக்கு என்னுடைய கைகளைக் கட்டிப்போட்டார்கள். அடுத்த நாள் காலை 10 மணி வரை ரொம்ப நேரத்துக்குத் தடியால் அடித்துக் கொண்டேயிருந்தார்கள். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு நாங்குனேரி சப்-ஜெயிலில் ஆறு மாதம் வைத்திருந்தார்கள். காலை நேரத்தில் காலைக் கடனுக்காக மட்டும் கொஞ்ச நேரம் வெளியில் திறந்து விடுவார்கள். மற்ற நேரமெல்லாம் இரவு, பகலாக மூத்திரச் சட்டியுடன் லாக்-அப் உள்ளேயேதான் இருக்க வேண்டும்”.
நல்லகண்ணு அனுபவித்த சித்ரவதைகளின் சிறு பகுதிதான் இவை. இந்தியாவில் எவ்வளவோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்; எவ்வளவோ தியாகங்கள் செய்திருக்கிறார்கள். ஆனால், நல்லகண்ணுவின் வாழ்க்கையும், மக்களுக்காக அவர் செய்துள்ள தியாகங்களும் யாருடனும் ஒப்பிட முடியாதவை.
உலகெங்கும் உள்ள தமிழர்கள் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தத் தலைவர், மிகச் சிறு வயதிலேயே தனது பொதுவாழ்க்கையைத் தொடங்கிவிட்டார். அப்போதே தனது வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நல்லகண்ணு முடிவு செய்துவிட்டார்.
தாயார், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஆர்.நல்லகண்ணு.
நல்லகண்ணுவின் குடும்பம் அந்தப் பகுதியில் ஓரளவு வசதியான குடும்பம்தான். நல்லகண்ணுவோடு சேர்த்து 10 பிள்ளைகள் என்றாலும், அனைவரையும் படிக்க வைக்கும் அளவுக்கு அவரது தந்தையாருக்கு வசதி இருந்தது. நல்லகண்ணுவின் மூத்த அண்ணன் ஐ.ஆர்.எஸ். படித்து, சுங்கத் துறையில் பணிபுரிந்தார்.
நல்லகண்ணுவும் நெல்லை இந்துக் கல்லூரியில் படித்தார். அவர் படிப்பில் ஆர்வம் மிக்கவராகத்தான் இருந்தார். இன்னும் ஓரிரு ஆண்டுகள் படித்திருந்தால், அவரும்கூட உயரிய அரசுப் பதவிகளுக்குச் சென்றிருக்க முடியும். ஆனால், நாட்டில் விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், படிப்பைத் தொடர விரும்பாமல், நாட்டு விடுதலைப் போராட்டக் களத்துக்கு வந்துவிட்டார்.
நல்லகண்ணு மீது தொடரப்பட்ட வெடிகுண்டு வழக்கு, புனையப்பட்ட ஒரு வழக்கு என்று அனைவருக்குமே தெரிந்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், அக்கட்சிக்காகத் தீவிரமாகச் செயல்பட்ட ஒருவரை, முடக்க வேண்டும் என்பதுதான் அந்த வழக்கின் நோக்கமாக இருந்திருக்கிறது. வழக்கில் நீதிமன்ற விசாரணை முடிந்து, தீர்ப்பு சொல்லும் நாள் நெருங்கி வருகிறது. அப்போது என்ன நடந்தது என்பதை நல்லகண்ணுவின் சகோதரர் இருளப்பன் கூறுகிறார்:
‘கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகுவதாகச் சொன்னால் வழக்கு ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும்’ என்று சொன்னார்கள். இது பற்றி சிறையில் இருந்த அண்ணன் நல்லகண்ணுவைப் பார்த்துப் பேசினோம். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட அவர், “நம் குடும்பத்தில் மொத்தம் பத்து பேர். வீட்டுக்காக நீங்கள் ஒன்பது பேர் இருக்கிறீர்கள். தயவுசெய்து என்னை என் வழியிலேயே விட்டுவிடுங்கள். நான் ஒருவன் மட்டும் இல்லாததால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. நான் என்னால் முடிந்த மட்டும் நாட்டு மக்களுக்காக வேலை செய்கிறேன். அதில்தான் எனக்கு விருப்பம் இருக்கிறது” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு 1925 டிசம்பர் 26 அன்று இரண்டாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 4 சகோதரர்கள், 5 சகோதரிகள். ஸ்ரீவைகுண்டம் காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிப் படிப்பை முடித்தார். நெல்லைச் சந்திப்பில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பி.ஓ.எல். இடைநிலை வகுப்புப் (இண்டர்மீடியட்) படித்தார்.
மீசையை நெருப்பால் பொசுக்கியபோது ஏற்பட்ட மரண வலியை மறந்துவிட்டு, பல மாதங்களாக மூத்திரச் சட்டி நாற்றத்துடன் லாக்-அப்பில் அடைந்து கிடக்கும் கடும் ரணங்களை மறந்துவிட்டு, உடன் பிறந்தோர் உருக்கத்துடன் கெஞ்சுவதைப் புறக்கணித்துவிட்டு, ‘என் வாழ்வும், பணியும் மக்களுக்காகவே’ என்று ஒருவர் தெளிவாகவும், உறுதியாகவும் முடிவு எடுக்கிறார் என்றால், அவர் மக்களுக்காகத் தொண்டு செய்வதில், தியாகம் செய்வதில் எவ்வளவு உறுதிகொண்ட மனிதராக இருந்திருக்கிறார் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியும்.
மக்களுக்காக அர்ப்பணித்துக்கொண்ட தனது வாழ்வை, மக்களுக்காகவே முழுமையாக வாழ்ந்திருக்கிறார் நல்லகண்ணு. நாட்டின் விடுதலைப் போராட்டத்தையும், மக்களுக்கான சமூக விடுதலைப் போராட்டங்களையும் ஒருங்கிணைத்து அவர் நடத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட நல்லகண்ணுவின் பணிகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டது. சுதந்திர தின விழாவில் இந்த விருதை நல்லகண்ணுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவப்படுத்தினார். இந்த விருதுடன் தனக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்ச ரூபாயுடன், தனது பணம் ரூ.5,000 சேர்த்து தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக நல்லகண்ணு திரும்பி கொடுத்துவிட்டார்.
அரசியல், சமூக, பொருளாதார, இலக்கியத் துறைகளில் அறிவுசார் ஆளுமைகளோடு ஆழமாக விவாதிக்கும் திறனைப் பெற்றிருந்த ஆர்.என்.கே. அது பற்றி எப்போதுமே பெருமிதம் அடைந்ததில்லை.
“நாம் பெற்றுள்ள அறிவு யாவும் இந்த சமுதாயத்திடமிருந்து கற்றது; அந்த அறிவை இந்த சமுதாயத்தின் உறுப்பினர்களான மக்களின் மேம்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்; நம்மிடம் காணப்படும் அறிவு என்பது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். மாறாக, நம் அறிவு வளம் என்பது செருக்காக அல்லது பகட்டாக வெளிப்பட்டால், சாமானிய மக்கள் மிரட்சி அடைந்து நம்மைவிட்டு ஒதுங்கி, விலகிச் சென்று விடுவார்கள்” என்று எச்சரிக்கிறார் அவர்.
நல்லகண்ணுவின் அறம் சார்ந்த வாழ்க்கை பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்கள் அனைவருக்குமான முன்னுதாரணம்; அவருடைய அறவாழ்வு என்பது ஓர் அடையாளம்; அறம் சார்ந்த விழுமியங்களோடு வாழ விரும்பும் அனைவருக்கும் ஆர்.என்.கே.வின் வாழ்க்கை இன்னும் பல காலத்துக்கு வழிகாட்டும் வெளிச்சமாகத் திகழும் என்பது நிச்சயம்.