மொழிக் கொள்கையும் கல்விக் கொள்கையும்

இருமொழிக் கொள்கை ஏன் முக்கியமாகிறது?
மொழிக் கொள்கையும் கல்விக் கொள்கையும்
Updated on
3 min read

மொழிப் பிரச்சினை தொடர்பாக மீண்டும் விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட வல்லுநர்கள் அடங்கிய அரசமைப்பு அவையிலேயே ‘மொழிப் பிரச்சினை’ விவாதப் பொருளாக மாறிவிட்டது. இப்போது அந்த வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்.

இந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம்

அயர்லாந்து நாட்டில், அதன் பண்டைய மொழியான ‘ஐரிஷ்’ தேசிய மொழியாகவும், ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுபோல, இந்தியாவின் தேசிய மொழியாக சம்ஸ்கிருதத்தை அறிவிக்க வேண்டும் என்று அரசமைப்பு அவையில் சிலர் வாதிட்டனர். இறுதியில் இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியாக தேவநாகரி வரிவடிவிலான ‘இந்தி’ ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தி தேசிய மொழியாக அல்லாமல் நிர்வாகப் பயன்பாட்டுக்கான அலுவல் மொழியாக மட்டுமே அறிவிக்கப்பட்டது. சம்ஸ்கிருதத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் அதை எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இடம்பெற வைத்தனர்.

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, சட்டக்கூறு 343 இன்படி இந்தியோடு இணை அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேவேளை ஆங்கிலத்தின் பயன்பாடு கால அவகாசம் 15 ஆண்டுகள் என்று வரையறுக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் அதே பகுதி 17இல் உள்ள சட்டக்கூறு 348இன்படி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், சட்ட வரைவுகளுக்கான மொழியாக ஆங்கிலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் பயன்பாடு குறித்து வரையறுக்கப்படாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.

சட்டக்கூறு 343இன்படி, இந்தியா குடியரசு நாடான பிறகு 15 ஆண்டுகளுக்கு மட்டுமே, அதாவது 1965 வரை, ஆங்கிலம் மத்திய அரசின் இணை அலுவல் மொழியாக நீடிக்கலாம் என்பதன் நோக்கமே 15 ஆண்டுகளுக்குள் இந்தியைக் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என்பதுதான்.

அரசமைப்புரீதியான கட்டாயம்

அதேநேரம் ஒரு பாதுகாப்பு அம்சமும் அதில் இடம்பெற்றது. அதாவது, 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆங்கிலம் தேவைப்பட்டால் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் நீட்டித்துக்கொள்ளலாம் என்பதே அது. இந்த வழிகாட்டுதலைத் தொடர்ந்துதான் 1963 அலுவல் மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஆங்கிலம் நீடிக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்தச் சட்டம் உருவாக, சட்டக்கூறு 348 உதவியாக இருந்தது என்பதும் உண்மை. இந்தி பேசாத மக்களுக்கு இது பாதுகாப்பாகவும் அமைந்தது. சட்டக் கூறு 348க்கு நாடாளுமன்றம் ஒரு மாற்றுச் சட்டம் இயற்றாதவரை கல்வி / மொழிக் கொள்கையில் ஆங்கிலம் நீடிப்பது ஓர் அரசமைப்புரீதியான கட்டாயம் (Constitutional Necessity) ஆகும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in