

வைகறை வாணன்
எழுத்துலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவந்த பதிப்பாளர், கவிஞர், தமிழ்ச் சிந்தனை மரபின் மொழி-பண்பாடு குறித்த ஆழமான கருத்துகளை எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கவர் வைகறை வாணன். ஆகஸ்ட் 15 அன்று அவரது 77வது பிறந்த நாள் கொண்டாடப்படவிருந்த சூழலில், ஆகஸ்ட் 1ஆம் தேதியன்றே அவர் இயற்கையோடு கலந்துவிட்டார்.
“புனல்சூழ் மணல் தோப்பின் குயில் கூட்டம் நாங்கள்” எனத் தன் சுற்றத்தையும் நட்பையும் பெருமிதத்துடன் குறிப்பிட்ட வைகறைக் குயிலின் கூவல் ஓய்ந்துவிட்டது. கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் அமைந்த இராமநல்லூர் எனும் சிற்றூரில் பிறந்த வைகறை, திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர்; பழந்தமிழ் அறிஞர் தி.வே. கோபாலய்யரிடம் பாடம் கேட்ட பெருமைக்குரியவர்.
சென்னைக்குச் சென்று அச்சுத் தொழிலில் தடம் பதித்தார். அவர் தங்கியிருந்த கோடம்பாக்கம் இல்லம், இலக்கியவாதிகளுக்கும் இடதுசாரி இயக்கத்தினருக்கும் உறைவிடமாகத் திகழ்ந்தது. ‘இராசகிளி பிரிண்டர்ஸ்’ அச்சகத்தின் வழியே பல நூல்களை வெளியிட்டவர்; ‘கார்க்கி நூலகம்’ பதிப்பகத்தின் மூலம் வி.பி. சிந்தன் போன்ற இயக்க அறிஞர்களின் படைப்புகளையும், கே. டானியலின் ‘கோவிந்தன்’ நாவலையும் பதிப்பித்தார்.
இதோடு அரசு ஊழியன், மக்கள் செய்தி, பாலம், சங்கொலி, நக்கீரன், போர்வாள், குமுதம் போன்ற இதழ்களிலும் பணிபுரிந்தார். கு.கைலாசம், கி.பி. அரவிந்தன், செந்தலை கவுதமன், சி.அறிவுறுவோன், காக்கைச் சிறகினிலே முத்தையா, பொதியவெற்பன், கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம், ஓவியர்கள் சிற்பி தனபால், ஆதிமூலம், வீர. சந்தானம், மருது, பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி, வீ.அரசு, இளவரசு எனப் பலதரப்பட்ட ஆளுமைகளுடன் நெருங்கிய பிணைப்புக் கொண்டிருந்தார்.