

மனிதர்களிடம் உறையும் பலவிதமான மனக் கோலங்களைப் பிரபஞ்சன் தம் கதைகளின் ஊடே நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். எனினும், மனிதத்தின் நற்பண்புகளை அவர் மொழியாளும்போது அக்கதைகள் பேராழம் கொண்டு விடுகின்றன; அதற்கு ‘எனக்கும் தெரியும்’ என்னும் அழகிய படைப்பே சான்று.
மூர்த்திக்குத் தூரத்து உறவில் பெண் பார்க்கிறாள் தாய். வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் அக்குடும்பத்தின் எளிய சூழலைக் கண்டதும், தன் மகனுக்குக் கிடைக்கக்கூடிய நூற்றுக்கணக்கான பவுன் நகைகளும் காரும் தப்பவிடக் கூடாதெனத் துடிக்கிறாள்.
அதேவேளையில், பெண் வீட்டார் தங்களையே நம்பிக் காத்திருந்து நல்லதொரு வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, இப்போதைக்குத் திருமணம் சாத்தியமில்லை என்ற செய்தியைத் தெரிவித்து வர மூர்த்தியை அனுப்புகிறாள். பெண்ணை நிராகரிக்கும் அச்செய்தியோடு சுகுணாவின் இல்லத்துக்குச் செல்லும் மூர்த்தி, அந்த ஒற்றைச் சந்திப்பில் முற்றிலும் புதியதொரு மனிதனாக உருமாறுகிறான்; இதுவே இக்கதையின் உயிர்ச்சரடு.
நிராகரிப்பின் சொற்களை எவ்வாறு வெளிப்படுத்துவது எனத் தன் மனதுக்குள் உத்திகளை ஆயத்தப்படுத்துகிறான் மூர்த்தி. தன் மகளின் திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் வீடற்ற நிலைக்குத் தங்களை உறிஞ்சிவிட்டதாகக் குமுறிய அதே தாய்தான், இங்கேயும் சோமு மாமாவின் பிணைப்பு வேண்டாமென மறுக்கிறாள். மாமனார் வீட்டுக்குச் செல்லும்போது அரிசி, பருப்பு, உப்பு, புளியென மூட்டை மூட்டையாய்ச் சுமந்து செல்லும் நிலை வந்துவிடும் என்ற நடைமுறைச் சூழலைச் சொல்லி, திருமணத்தை மறுத்து வருமாறு மகனை வழியனுப்புகிறாள்.