

கவியரசு கண்ணதாசன் அபூர்வமான, ஒன்றைச் சொல்லி வேறொன்றை உணர்த்துகிற உருவகப்பாணியில் ‘முடிவின் தொடக்கம்’ என்ற கதையை எழுதியிருக்கிறார். கார்சியா மார்க்வெஸ் தன் ‘நூற்றாண்டுகாலத் தனிமை’ நாவலில் கற்பனையான உலகில் கதையை நிகழ்த்தி இன்றைய வாழ்க்கையை விமர்சிப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, கண்ணதாசன் இக்கதையில் அதனைச் சாதித்திருக்கிறார்.
அதிகார ஆணவம்: ‘அ’, ‘ஆ’, ‘இ’, ‘ஈ’ என்ற நான்கு நாட்டுத் தலைவர்களிடையே தான்தான் பெரியவன் என்ற ஆணவம் தலைதூக்குகிறது. பாதுகாப்பாகப் பதுங்கிக்கொண்டு அவர்கள் ஏவிய படைகளால் கோடானுகோடி மக்கள், கட்டிடங்கள், பறவைகள், விலங்குகள் என அனைத்தும் அழிகின்றன. அழிவை நிகழ்த்திய நால்வரும் வெளியே வந்து தங்கள் ஆற்றலைப் பெருமையுடன் பேசிக்கொள்கின்றனர். பின், தங்களின் சொந்த உறவுகளும் போரில் மடிந்ததைக் கண்டு திகைக்கின்றனர்.