

குடும்ப உறவுகளின் மிக நுண்ணிய பிரதேசங்களுக்குள் ஆழமாகத் தேடிச் சென்று, அதன் சிக்கல்களைத் தொட்டுத் திறப்பதே லா.ச.ராமாமிருதத்தின் எழுத்தியக்கம். வாழ்வின் கசப்புகளை உட்செரித்து, அமுதமாகப் பொங்கும் ஒரு மகத்தான கணத்தைச் சித்தரிக்கும் உன்னதக் கதைகளுள் ஒன்று ‘கொட்டுமேளம்’.
தன்னலமற்ற தியாகம்: சந்துரு ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைமகன். தந்தை இல்லாத நிலையில், பொறுப்புகள் அனைத்தும் அவன் தோள்களில் விழுகின்றன. தன் மூன்று சகோதரிகளுக்கும் திருமணம் செய்து முடித்த பிறகே தான் திருமணம் செய்துகொள்வேன் என்ற வைராக்கியத்துடன் உழைக்கிறான். ஆனால், அவனது திருமணத்துக்கு முன்பே மூத்த சகோதரி ஜானா விதவையாகி மீண்டும் அண்ணன் வீட்டுக்கே அடைக்கலமாக வருகிறாள். அவளது எதிர் காலத்துக்காக அவளைத் தொடந்துபடிக்க வைக்கிறான் சந்துரு.