

இந்திய சமூகநீதி இயக்க முன்னோடியான மகாத்மா ஜோதிபா புலே (1927-1890) பிறந்தநாளையொட்டி தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் ஜோதிபா, சாவித்ரிபாய் சிலைகளைத் திறந்துவைக்க உள்ளார்.
தலைநகரில் புலே தம்பதியர்க்குச் சிலை அமைப்பது குறித்துக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே அறிவிக்கப்பட்டு, முதலமைச்சரே கள ஆய்வுகளை மேற்கொண்டார். எனினும் தற்போது இச்சிலைகளின் திறப்பு விழாவுக்குக் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.
அதற்கான காரணங்களுக்குள் செல்வதற்கு முன்பு, அண்மையில் வெளியான இரண்டு நூல்களில் இடம்பெற்ற சில வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக அமையும்.
புலே விழாவில் பெரியார்
அம்பேத்கரின் வாழ்விணையர் சவிதா எழுதிய ‘பாபா சாஹேப்: டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை’ நூலினை எழுத்தாளர் த.ராஜன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலில் பெரியார் குறித்து இரண்டு குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. முதலாவது, ரங்கூனில் 1954 டிசம்பரில் நடைபெற்ற பௌத்தர்களின் உலகக் கூட்டுறவு அமைப்பின் மூன்றாவது மாநாடு குறித்தது.
அம்பேத்கர், சவிதாவுடன் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்பேத்கரின் அணுக்க சகாவான காசிநாத் விஷ்ராம் சவாத்கர், பம்பாயில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட ‘தமிழ்நாட்டுத் தாடிக்காரர்’ இங்கேயும் வந்திருப்பதாகச் சொல்ல, பெரியாரை அழைத்து அவருடன் ஒரு மணி நேரம் உரையாடினார் அம்பேத்கர். சவிதாவும் உடன் இருந்தார். பிராமண வெறுப்பைக் கைவிட்டு பௌத்தம் தழுவுமாறு அம்பேத்கர் பெரியாரிடம் கேட்டுக்கொண்டதை மட்டுமே சவிதாவால் நினைவுகூர முடிந்துள்ளது.
இரண்டாவது குறிப்பு, ரங்கூன் சந்திப்பில் நினைவுகூரப்பட்ட படப்பிடிப்பு. ஆச்சார்ய ஆத்ரே இயக்கத்தில் மகாத்மா ஜோதிபா புலே வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கான படப்பிடிப்புத் தொடக்க விழாவில் பெரியார் கலந்துகொண்டார் என்பது. அன்றைய நாள்களில் புராண, இதிகாச நாடகங்களின் மறுபதிப்புகளாகத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்ட வேளையில், அவற்றைக் கடுமையாகச் சாடிய பெரியார் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.