

அண்மையில் நெதர்லாந்து நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியிடம், சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள் லெய்டன் (Leiden) பல்கலைக்கழகத்தினரால் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
சர்வதேச அளவில் ‘பெரிய லெய்டன் செப்பேடு’ (Larger Leiden Plates) என்று அழைக்கப்படும் 30 கிலோ எடையுள்ள இந்த வரலாற்றுப் பெட்டகம், தாயகம் திரும்புவது தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு புதிய விடியல். இதில் தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் இன்னோர் அம்சமும் இருக்கிறது.
செப்பேட்டின் உருவாக்கம்
பொ.ஆ. (கி.பி.) 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சோழப் பேரரசு கடல் கடந்த வணிகத்திலும் கடற்படை அதிகாரத்திலும் உச்சத்தில் இருந்தபோது இந்தச் செப்பேடுகள் உருவாக்கப்பட்டன. சைவ சமயத்தின் மீது பற்றுக்கொண்ட சோழ மன்னர்கள், சர்வதேசத் தூதரக உறவுகளைப் பேணிவந்தனர்.
அந்தக் காலத்தில், இன்றைய இந்தோனேசியப் பகுதியான விஜய நாட்டு அரசன் மாறவிஜயோத்துங்க வர்மன், தமிழகத்தின் முதன்மைத் துறைமுக நகரான நாகப்பட்டினத்தில் பௌத்தத் துறவிகளுக்காக ஒரு விகாரையைக் (ஆலயம்) கட்ட அனுமதி கேட்டார்.
அதற்குப் பெருமனதோடு அனுமதி அளித்த மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன், ‘சூடாமணி விகாரம்’ (ராஜராஜ சோழன் பெரும்பள்ளி) என்கிற அந்த பௌத்த ஆலயத்தின் தினசரிப் பராமரிப்புக்காக, 97 வேலி பரப்பளவு கொண்ட ‘ஆனைமங்கலம்’ என்கிற ஒட்டுமொத்தக் கிராமத்தின் நில வருவாயையும் கொடையாக அள்ளித் தந்தார்.
தந்தையின் மறைவுக்குப் பின், அரியணை ஏறிய அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழன் இந்த வாய்மொழி ஆணையை முறைப்படுத்தி, 21 பெரிய செப்பேடுகளில் அரசாணையாகப் பொறித்து, சோழர்களின் அதிகாரபூர்வ ராஜமுத்திரையுடன் வெண்கல வளையம்பூட்டி நிரந்தர ஆவணமாக மாற்றினார்.
கைப்பற்றிய டச்சுக்காரர்கள்
சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாகப்பட்டினம் பகுதி டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. அப்போது ஏற்பட்ட போர்கள், அரசியல் குழப்பங்களின்போது, உள்ளூர் மக்கள் இந்தச் செப்பேடுகளை நிலத்தடியில் புதைத்துப் பாதுகாத்ததாகக் கூறப்படுகிறது.