

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையை, வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் ஆகஸ்ட் 6இல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். புதுமை, தொழில்நுட்பம், உற்பத்தித் திறன் மூலம் வேளாண்மையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் தொலைநோக்குப் பார்வையை இந்த அறிக்கை முன்வைக்கிறது.
முக்கிய அம்சங்கள்
2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறை முன்னேற்றத்துக்காகத் தமிழ்நாடு அரசு ரூ.47,248.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஏறக்குறைய ரூ.1,600 கோடி அதிகம்.
கடந்த ஆறு வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் வேளாண்மைக்கும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்காக மட்டும் ரூ.2.4 லட்சம் கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் உணவு தானிய உற்பத்தியை 125 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதை 131 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விவசாயிகளுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திட்டம், நீர்ப்பாசன விரிவாக்கம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள், துல்லிய வேளாண்மை உள்ளிட்ட பல புதிய முயற்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவை நவீனமானவை மட்டுமல்ல, எதிர்கால வேளாண்மையை நோக்கிய தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்துகின்றன. ஆனால், இன்றைய தமிழ்நாட்டு வேளாண்மையின் அடிப்படைச் சிக்கல்களைத் தொழில்நுட்ப முன்னெடுப்புகள் மட்டும் தீர்த்துவிடுமா என்பது முக்கியமான கேள்வி.
அரசின் குறிக்கோள்
தனது உரையின் தொடக்கத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வேளாண்மைத் துறை அடைந்த முன்னேற்றங்களை அமைச்சர் பட்டியலிட்டிருக்கிறார். இவை பெரும்பாலும் முந்தைய அரசுகளின் முயற்சிக்கான பலன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பலன்களை அடித்தளமாக வைத்து ஏஐ உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் புதிய வேளாண் மாற்றத்தை உருவாக்குவதே தற்போதைய அரசின் குறிக்கோளாகத் தெரிகிறது.
பல உலக நாடுகளின் அரசுகள் ஏஐ, துல்லிய வேளாண்மை போன்ற தொழில்நுட்பங்கள் நீர்ப்பாசனம், உரப் பயன்பாடு, பூச்சி மேலாண்மை, வானிலை அடிப்படையிலான முடிவெடுத்தல் போன்றவற்றில் விவசாயிகளுக்குக் கணிசமான உதவியை வழங்கியுள்ளன.