

ஆகஸ்ட் 2026இல் நிதி ஆயோக் வெளியிட்ட ‘2047ஆம் ஆண்டுக்கான விக்சித் பாரத் திறன் மேம்பாட்டை மறுவடிவமைத்தல்’ (Reimagining Skilling for Viksit Bharat@2047) அறிக்கை, இன்றைய இளையோரின் நிலை, வேலைவாய்ப்புகள் குறித்துப் பல்வேறு புதிய தகவல்களை முன்வைக்கிறது.
இளையோருக்கான புதிய திசையைக் காட்டுகிறது. குறிப்பாக, ‘எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற திறன்களை இளையோரிடம் உருவாக்குவது மிக அவசியம்’ என வலியுறுத்துவதுடன் ‘இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் இளையோர் சக்திதான்.
எனவே அவர்களின் கல்வி, திறன், வேலைவாய்ப்பு ஆகியவற்றை முறையாகத் திட்டமிட்டு ஒருங்கிணைக்க வேண்டும். அப்போதுதான் இளையோர் சக்தி நாட்டின் வளர்ச்சிக்கான ஆற்றலாக மாறும். இதுவே 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அடித்தளம்’ என்கிறது அந்த அறிக்கை!
உலகளாவிய சவால்
மனிதர்களைப் போலச் சிந்தித்துச் செயல்பட உதவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (Advanced AI), மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திரங்கள் தானாகச் செய்யும் தானியக்கத் தொழில்நுட்பம் (Automation), இணையம் / கணினித் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலான புதிய உற்பத்தித் துறைகளில் பசுமை வேலைவாய்ப்புகள் (Green Jobs) வேகமாக உருவாகிவருகின்றன. இ
தனால், எதிர்கால வேலைவாய்ப்புகளின் தன்மையும் தேவைகளும் மாறுகின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப இளையோரின் கல்வியையும் திறன்களையும் மேம்படுத்த வேண்டும். கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, பணியிடப் பயிற்சி, நடைமுறைப் பயிற்சி ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் அறிக்கை வலியுறுத்துகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலக நாடுகளுக்கும் சவாலாக உள்ளது.
உலகில் இளையோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) தரவுகளின்படி, உலகில் 10 முதல் 24 வயது வரை 190 கோடிக்கும் அதிகமான இளையோர் உள்ளனர்.
இவர்களில் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் 120 கோடிக்கும் அதிகம். இவர்களில் பெரும்பாலானோர் வளர்ந்துவரும் நாடுகளில் வாழ்கின்றனர். கல்வி, தேவையான திறன், வேலைவாய்ப்பு கிடைத்தால்தான், இந்த இளையோர் சக்தி உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக மாறும்.