

ஒவ்வொரு தலைமுறையும் தன்னைத் தொடர்ந்து வருபவர்களிடம் தெரியும் சின்ன சின்ன மாற்றங்களை வியப்புடனும் சற்றுக் கவலையுடனும் கவனித்து வந்திருக்கிறது. எனினும், இன்றைக்கு ஜென் ஸீ தலைமுறை குறித்த விவாதங்கள் கூடுதல் கவனம் பெறுகின்றன.
1997 முதல் 2012 வரை பிறந்த ஜென் ஸீ தலைமுறையினர் ‘காலத்துக்கேற்ற சின்ன வித்தியாசம்’ என்கிற எல்லையைத் தாண்டி நிற்கிறார்கள். உலகமயமாக்கல், இணையப் புரட்சி, சமூக ஊடகங்களின் ஆதிக்கம், செயற்கை நுண்ணறிவின் வருகை, நாளுக்கு நாள் மாறும் வேலைவாய்ப்புச் சூழல் - இவை எல்லாம் சேர்ந்துதான் இந்தப் புதிய சிந்தனையுடைய தலைமுறையை உருவாக்கியிருக்கின்றன.
திரையோடு பிறந்த தலைமுறை
முந்தைய தலைமுறையான மில்லேனியல்கள் (Millennials) கணினி, இணையம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு பழகியவர்கள். ஜென் ஸீ தலைமுறையினர் திறன்பேசி, சமூக ஊடகம், இணையம் இவற்றுடனே பிறந்தவர்கள்.
‘கற்றுக்கொள்வது’ என்கிற கட்டமே இல்லாமல், இவற்றுடனேயே பிறந்து வளர்ந்த முதல் தலைமுறை இது. இவர்களின் உலகப் பார்வையை, தன்னம்பிக்கையை, தகவல் அணுகும் விதத்தை, உறவுகளை வளர்த்துக்கொள்ளும் முறையை அடியோடு இது மாற்றிவிட்டது.
முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது ஜென் ஸீ இளைஞர்களிடம் தெளிவாகத் தெரியும் சில மாற்றங்கள் உள்ளன. முதலில், அவர்கள் மிகவும் சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர்கள். குடும்பம், சமூகம், கல்வி, தொழில் என எல்லா விஷயத்திலும் தங்களுக்கென்று தனிப்பட்ட கருத்துகளை வைத்திருக்கிறார்கள்.
இரண்டாவதாக, அவர்களுடைய பார்வை உலகளாவியது. அமெரிக்காவில் நடக்கும் ஒரு சமூக விவாதமும், ஜப்பானில் நடக்கும் ஒரு தொழில்நுட்ப மாற்றமும் இவர்களுடைய அன்றாட உரையாடலில் இடம்பெறுகின்றன. அதேவேளையில், ‘தங்களைச் சுற்றி நேரடியாக நடக்கும் விஷயங்களைக் கடந்து போய்விடுகிறார்கள்’ என்கிற குற்றச்சாட்டும் உண்டு.
அரசு வேலை அல்லது ஒரு நிறுவனத்தில் நிரந்தரப் பணி - இதுதான் முந்தைய தலைமுறைக்கு வாழ்க்கையின் இலக்காக இருந்தது.
ஜென் ஸீக்கோ, நெகிழ்வுத்தன்மை உள்ள வேலைகள், தொழில்முனைவு, படைப்பாற்றல் மிக்க பணிகள், பல்வேறு வருமான வழிகள் - இவைதான் முக்கியமானவையாகத் தெரிகின்றன. பணம் முக்கியம்தான், ஆனால் அதற்காகத் தங்கள் வாழ்க்கை முழுவதையும் ஒரே வேலையில் தொலைக்க அவர்கள் தயாராக இல்லை.