

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் எந்த அளவுக்குச் சூடுபிடித்திருக்கிறது என்பதை அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளையும், தேர்தல் அறிக்கைகளையும் வைத்து நாம் தெரிந்துகொள்ளலாம். பல அரசியல் கட்சிகள் மக்கள்நலத் திட்டங்களை முதன்மையாகக் கொண்டு வாக்குறுதிகளை அறிவித்துவருகின்றன.
குறிப்பாக, குடும்பங்களுக்கு நேரடி நிதி உதவி, பெண்களுக்கு மாதாந்திர ஆதரவு, இலவசச் சேவைகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் போன்றவை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தத் திட்டங்கள் மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்வதாக இருந்தாலும், அடிப்படையில் வாக்குகளைக் குறிவைத்தே உருவாக்கப்படுகின்றன.
இந்த நிலையில், இத்தேர்தலில் தேர்தல் அறிக்கைகளின் அடிப்படையில் கட்சிகளிடையேயான போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளைவிட அதிக நலத்திட்டங்களை அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், ‘யார் அதிகம் வழங்குகிறார்கள்?’ என்ற கேள்வி தேர்தல் அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வாக்குறுதிப் போட்டியானது, பல நேரங்களில் மக்களின் கவனத்தை ஈர்க்கும்படியாக இருந்தாலும் அது நாட்டின் நிதி தொடர்பான சிக்கல்களை உருவாக்கும்.
சமநிலை அவசியம்
மாநிலத்தின் நிதிநிலை குறித்தான விஷயங்களிலும் கட்சிகள் இங்கு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கெனவே கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, பொது விநியோகத் திட்டம் போன்ற துறைகளில் அரசின் செலவுகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் புதிய திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மொத்தச் செலவு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது எதிர்காலத்தில் அரசுக்குப் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடும்.
அதேவேளையில், தமிழ்நாட்டின் நலத்திட்ட வரலாறு நாட்டிலேயே குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளன. குறிப்பாக, ஊட்டச்சத்து உணவுத் திட்டங்கள், கல்வி சார்ந்த உதவிகள், சுகாதார மேலாண்மைச் சேவைகள் போன்றவை சமூக முன்னேற்றத்துக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன.