

அண்மையில் இந்தியாவில் மருந்துகளின் விலை நிர்ணயம் குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளும், புற்றுநோய் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் நம் கவனத்தை ஈர்க்கின்றன.
2026 அக்டோபர் 17இல் வெளியான மத்திய அரசின் செய்திக்குறிப்பின்படி, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் இல்லாத 137 புற்றுநோய் மருந்துகளின் வணிக லாப வரம்பை 30 சதவீதமாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) சில மருந்துகளில் 20 முதல் 70 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும், பயனாளிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,500 கோடி சேமிப்பு ஏற்படலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை, புற்றுநோய் சிகிச்சைக்கான பொருளாதாரத் தடைகளை உடைப்பதில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப் பெரிய முன்னேற்றம் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், இந்த விலை குறைப்பு மட்டுமே புற்று நோய் சிகிச்சை செலவுகளைக் குறைத்துவிடுமா?
என்னென்ன செலவுகள்?
புற்றுநோய் உள்ள ஒரு பயனாளி எதிர்கொள்ளும் செலவுகள் மருந்துகளோடு நின்றுவிடுவதில்லை. நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள், அறுவைசிகிச்சை, கீமோதெரபி என்னும் மருந்து சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, நோய் எதிர்ப்பு சிகிச்சை (Immunotherapy), மருத்துவமனை அறை - பிற கட்டணங்கள், தொடர் மருத்துவக் கண்காணிப்புச் செலவு, பயணச் செலவு, தங்குமிடச் செலவு என இன்னும் பல செலவுகள் இருக்கின்றன.
அடுத்து, புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு பல்வேறு காரணிகளைப் பொறுத்தும் மாறுபடுகிறது. புற்றுநோயின் வகை, பாதிப்பு நிலை, சிகிச்சை முறை, மருத்துவமனை அமைந்துள்ள இடம், அது அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா என்பன போன்றவை அவற்றில் முக்கியமானவை. எனவே, மருந்து விலைக் கட்டுப்பாட்டுடன், மருத்துவமனைக் கட்டணங்களிலும் வெளிப்படைத்தன்மை அவசியம்.
பயனாளியின் நம்பிக்கை
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பல நேரம் சிகிச்சை குறித்த தகவல்களைப் புரிந்துகொள்ள முடியாமல், வேறு வழியின்றி சிகிச்சையை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார். எந்த மருந்து வழங்கப்பட வேண்டும், அதன் விலை என்ன என்பதெல்லாம் பெரும்பாலும் மருத்துவர்களாலும் சுகாதாரப் பணியாளர்களாலும்தான் தீர்மானிக்கப்படுகின்றன.