

சுதந்திர இந்தியா இன்று, 15.08.2026 -ல், தனது 79 ஆண்டுகளை நிறைவு செய்து, 80-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நாம் அடைந்த சாதனைகளை மட்டுமல்லாமல், நாம் இழந்த பெருமைகளையும், அந்தப் பெருமைகளின் பொருளாதார மதிப்பையும் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சிந்தனையின் வெளிப்பாடாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.
“அறிவுடையார் எல்லாம் உடையார்” என்ற திருவள்ளுவரின் வரிகள், இந்திய நாகரிகத்தின் அறிவுச் செழுமையைப் புரிந்துகொள்ளும் திறவுகோலாகத் திகழ்கின்றன. கணிதம் முதல் மருத்துவம் வரை, யோகம் முதல் தொழில்நுட்பம் வரை, மனிதகுலத்தின் அறிவுப் பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது.
ஆனால், சுதந்திரத்தின் எட்டு தசாப்தப் பயணத்தில் இன்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி உள்ளது:
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய நமது அறிவையும் கண்டுபிடிப்புகளையும், இந்தியாவின் பொருளாதார வலிமையாகவும், உலகளாவிய சந்தை மதிப்பாகவும் நாம் மாற்றியிருக்கிறோமா? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடுவதும், வரலாற்றில் நாம் இழந்த வாய்ப்புகளை உணர்வதும், எதிர்கால இந்தியாவுக்கான புதிய பாதையை வகுப்பதும் இன்றைய காலத்தின் அவசியமாகிறது.
உலகக் கணிதத்தின் போக்கையே மாற்றிய பூஜ்ஜியமும் தசம எண் முறையும் இந்தியாவின் மகத்தான அறிவியல் பங்களிப்புகளில் அடங்கும். பிரம்மகுப்தர் பூஜ்ஜியத்தின் கணிதப் பயன்பாட்டை முறைப்படுத்தியதிலிருந்து, நவீன கணினி மற்றும் டிஜிட்டல் உலகம் வரை அதன் தாக்கம் விரிந்துள்ளது. அதேபோல், பிங்களரின் பண்டைய கணிதச் சிந்தனைகள் பின்னாளில் உருவான இரும எண் முறையின் (Binary System) ஆரம்பகால கருத்துகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.
இந்த அறிவியல் சிந்தனைகளின் தொடர்ச்சியே இன்று கணினி அறிவியல், வங்கித்துறை, செயற்கை நுண்ணறிவு, விண்வெளித் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன உலகின் பல்வேறு துறைகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம்: இன்று டிஜிட்டல் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஆனால், அந்த அடிப்படை சிந்தனையை உலக தொழில்நுட்ப நிறுவனங்கள் பல லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள தொழிலாக மாற்றியபோதும், அதன் அறிவியல் பாரம்பரியத்தின் உரிமையாளராக இந்தியா பொருளாதார பலன் பெறவில்லை.
சுஸ்ருதரின் அறுவைச் சிகிச்சை அறிவு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, குறிப்பாக மூக்கு மறுசீரமைப்பு, இந்திய மருத்துவ அறிவின் தொன்மையையும் மேம்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. இன்று மருத்துவமும் அழகியல் அறுவைச் சிகிச்சையும் பல பில்லியன் டாலர் உலகளாவிய சந்தைகளாக வளர்ந்துள்ளன.
யோகா இந்தியாவின் மற்றொரு உலகப் பரிசு. 2014-ல் ஐ.நா. ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இன்று யோகா உலக வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகிவிட்டது. ஆனால் அதன் உலகளாவிய வணிக மதிப்பில் இந்தியா பெறும் பங்கு, அதன் நாகரிகப் பங்களிப்புக்கு இணையாக உள்ளதா?
இது அறிவில் மட்டுமல்ல; நமது இயற்கைச் செல்வங்களின் வரலாறும் இதே கேள்வியை எழுப்புகிறது. இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து கிடைத்த கோஹினூர் உலகின் மிகப் புகழ்பெற்ற வைரங்களில் ஒன்று. இன்று பிரிட்டிஷ் அரச கிரீடத்தின் ஒரு மதிப்புமிக்க சொத்தாக உள்ளது. அதற்கு அதிகாரப்பூர்வமான இன்றைய சந்தை விலை இல்லை; அது விற்பனைக்குரிய சந்தைச் சொத்து அல்ல.
பல்வேறு மதிப்பீடுகள் கூறப்பட்டாலும், அதன் வரலாற்று மற்றும் பண்பாட்டு மதிப்பை பணத்தில் அளவிட முடியாது. இது ஒரு வைரத்தின் இழப்பு மட்டுமல்ல; இந்தியாவின் வர்த்தக ஆற்றல் எவ்வாறு காலனித்துவத்தின் மூலம் உலகிற்கு மாற்றப்பட்டது என்பதற்கான அடையாளமாகும்.
அறிவுசார் சொத்துரிமை: மஞ்சள், வேம்பு, பாஸ்மதி அரிசி போன்ற நமது பாரம்பரிய அறிவுகளுக்குக் கூட வெளிநாடுகளில் காப்புரிமை கோரப்பட்ட வரலாறு உள்ளது. இந்தியாவின் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்தி பாதுகாக்க Traditional Knowledge Digital Library (TKDL) உருவாக்கப்பட்டது. இது அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திய அனுபவத்தின் விளைவு.
பெரும்பாலான சந்தைகள் வேறு நாடுகளின் கைகளுக்குச் சென்றன. இதில்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம் இருக்கிறது.
அறிவை உருவாக்குவது முதல் வெற்றி. அதை ஆவணப்படுத்துவது இரண்டாவது வெற்றி. காப்புரிமை பெறுவது மூன்றாவது வெற்றி. அதை தொழிலாகவும் உலகச்சந்தையாகவும் மாற்றுவதே முழுமையான வெற்றி.
உலகின் முன்னணி நிறுவனங்களின் மதிப்பில் இன்று நிலம், கட்டடம், இயந்திரங்களை விட அறிவுசார் சொத்துரிமை, காப்புரிமை, தொழில்நுட்பம், பிராண்ட் ஆகியவற்றின் பங்கு அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்தை இந்தியா முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தும் “ஜெய் அனுசந்தான்” (Jai Anusandhan) இந்தப் புதிய சிந்தனையின் அடிப்படையாக அமைய வேண்டும். ஆய்வகத்தில் பிறக்கும் கண்டுபிடிப்பு காப்புரிமையாகவும், காப்புரிமை தொழிலாகவும், தொழில் உலகச் சந்தையாகவும், அந்தச் சந்தை இந்தியாவின் தேசிய செல்வமாகவும் மாற வேண்டும்.
“உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு” (Vocal for Local) என்பது இந்தியப் பொருளை வாங்குவது மட்டுமல்ல; இந்திய அறிவையும் இந்தியப் பெயருடன் உலகச் சந்தையில் மதிப்பாக்குவதாக இருக்க வேண்டும்.
காலத்தின் கட்டளை: “வசுதைவ குடும்பகம்” என்று உலகிற்கு வாழ்வியல் தத்துவத்தை வழங்கிய இந்தியா, “அறிவே செல்வம்” என்ற உண்மையையும் உலகிற்கு உணர்த்தியது. ஆனால் அறிவை பொருளாதார ஆற்றலாக மாற்றும் கலையை நாம் தாமதமாகக் கற்றோம்.
சுதந்திரத்தின் 80-வது ஆண்டில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி இதுவாக இருக்கட்டும்: உலகிற்கு அறிவை வழங்கிய இந்தியா, இனி அந்த அறிவின் பொருளாதாரத்தையும் வழிநடத்த வேண்டும். அதுவே வளர்ந்த பாரத் 2047 நோக்கி இந்தியா மேற்கொள்ளும் உண்மையான அறிவுப் புரட்சியாக அமையும்.
- கட்டுரையாளர், பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் மாநில தலைவர்