

பரபரப்பான கால்பந்துப் போட்டி. திடீரென விசில் ஒலிக்கிறது. வீரர்கள் பந்தைவிட்டு விலகி, மைதானத்தின் ஓரத்தில் நின்று உடலைக் குளிர்வித்துக்கொள்கிறார்கள். தொலைக்காட்சியில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. ரசிகர்கள் எரிச்சலுடன் கூச்சலிடுகிறார்கள்.
‘ஆட்டத்தின் ஓட்டத்தையே கெடுக்கிறது இந்த இடைவேளை’ என்று சிலர் விமர்சிக்கிறார்கள்; சிலரோ, ‘வெயிலில் வீரர்களின் உடல்நிலை பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டாமா!’ எனப் பதில் அளிக்கிறார்கள். இதுதான் 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் ஒவ்வொரு போட்டியிலும் காணப்படும் காட்சி.
முக்கியமான மாற்றம்
குளிர்விப்பு இடைவேளை புதிய முறை அல்ல. 2014 பிரேசில் உலகக் கோப்பையில்தான் இது முதன்முறையாக அறிமுகமானது. ‘ஈரக் குமிழ் வெப்பநிலை அளவீடு’ (Wet Bulb Globe Temperature - WBGT) ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டினால் மட்டுமே நடுவர் குளிர்விப்பு இடைவேளையை அறிவிப்பார்.
இது காற்றின் வெப்பநிலையை மட்டும் அல்லாமல் ஈரப்பதம், காற்றின் வேகம், சூரியக் கதிர்வீச்சு ஆகியவற்றையும் இணைத்து, நேரடி வெயிலில் மனித உடல் உண்மையில் எவ்வளவு வெப்பத்தை உணர்கிறது என்பதை அளவிடும் சர்வதேச அளவுகோல். ஆனால், 2026ஆம் ஆண்டு இந்த நடைமுறை மாறிவிட்டது.
வெப்பநிலை எப்படி இருந்தாலும், ஒவ்வொரு போட்டியிலும் மூன்று நிமிடக் குளிர்விப்பு இடைவேளை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தொலைக்காட்சி நிறுவனங்கள் விளம்பரங்களை ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளதால், ‘இது வீரர் நலனுக்காகவா, விளம்பர வருவாய்க்காகவா?’ என்கிற கேள்வி எழுகிறது.
‘இடைவேளை இருக்கிறதா இல்லையா என்பதல்ல முக்கியம். அது எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம். அபாயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாக இடைவேளை வழங்குவது, பாதுகாப்பு நடவடிக்கையையே அர்த்தமற்றதாக்கிவிடும்’ என்று சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஹேரி பிரவுன், ‘நேச்சர்’ (Nature) இதழில் எழுதியுள்ளார்.
கவனிக்கப்படாத வேறுபாடு
பிரவுனும் அவரது குழுவினரும், பயிற்சி பெற்ற 12 வீராங்கனைகளிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஐந்து வகையான இடைவேளை முறைகள் பரிசோதிக்கப்பட்டன.