

அவர்களுக்கு உயர்வு நவிற்சியில் உரைக்கத் தெரியாது. ஒருமையில்தான் பேசத் தெரியும். உள்ளத்தில் இருப்பதைத்தான் அவர்களால் கூற முடியும். சொல்பவற்றை ஒப்பனை வார்த்தைகளால் அலங்கரிக்கத் தெரியாது.
அவர்களுக்கு ஆடம்பர ஆடைகள் அணியத் தெரியாது. விலையுயர்ந்த துணிகள் அவர்கள் கையிருப்பில் கிடையாது. ஆனால், இருப்பதை எளிமையாக உடுக்கத் தெரியும். அவர்களுக்கு வளைந்து நெளிந்து வணங்கத் தெரியாது.
மனத்தில் மட்டுமே மரியாதை இருக்கும். அவர்களுக்கு அடிபணியத் தெரியாது. ஆனால், கீழ்ப்படியத் தெரியும். கூழைக் குடித்தாலும் குதூகலிப்பார்களே தவிர, கூழைக் கும்பிடு போட அறவே தெரியாது.
அவர்களின் ஐந்து விரல்களும் சோற்றைப் பிசைந்து வாய்க்குக் கொண்டுசெல்லுமே தவிர, இரண்டே விரல்களில் நாகரிகமாகச் சாப்பிடத் தெரியாது. அவர்கள் பசித்தால் மட்டுமே உண்பவர்கள். எப்போதாவதுதான் ருசியான உணவு அவர்கள் நாக்குக்குக் கிடைப்பதால் நாசூக்குப் பார்ப்பதில்லை.
எது நாகரிகம்? - நம்முடைய பார்வையில் அவர்களுக்கு நாகரிகம் தெரியாது. நாம் அவர்களை வரவேற்பறைக்கு வெளியிலேயே வைத்திருக்க விரும்புகிறவர்கள். அவர்கள் முகத்தைக்கூட உற்றுப் பார்த்து உரையாடுபவர்கள் குறைவு. அவர்களின் இல்லம் அழகாக இருக்காது. நம் ஓர் அறையே அவர்களுடைய வீடாக - உண்பதற்கும், சமைப்பதற்கும், உடுப்பதற்கும், படுப்பதற்கும், படிப்பதற்கும், பழகுவதற்குமான இடமாக இருப்பதுண்டு.
மாட்டுக் கொட்டிலைப் போலவே காட்சியளிக்கும் அந்தச் சின்ன வீட்டில் அவர்கள் படுகிற சிரமங்களையும் தாண்டி, நாம் துயிலெழுவதற்கு முன்பே - அதிகாலையில் பணிகளைத் தொடங்கி விடுவார்கள். இல்லம் சிறிதாக இருந்தாலும் உள்ளம் பரந்திருக்கும் பண்புடையவர்கள் அவர்கள்.
பட்டினி கிடந்தாலும் அவர்களுக்கு வைராக்கியம் அதிகம். ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடம்கொடுத்துவிடக் கூடாது என்று நடந்துகொள்பவர்கள் அவர்கள். வறுமையிலும் புன்னகைக்கத் தெரிந்தவர்கள் அவர்கள். துக்கத்திலும் துளிர்த்தெழக் கற்றவர்கள். வருத்தத்தை அடைகாத்துக்கொண்டு சோகத்தில் மூழ்கிப்போக அவர்களுக்கு அவகாசமும் இல்லை, வசதியும் இல்லை.
புதிய இடத்துக்கு நாம் வழி கேட்டால் பொறுமையாக அவர்களே பதில் சொல்பவர்கள். நவநாகரிக மனிதர்கள் உதட்டைப் பிதுக்கியும், கையை விரித்தும் தெரியாது என்று விடையளிக்கும்போது, இவர்கள் சமயத்தில் நம்மோடு வந்து தேடும் முகவரியைக் கைகாட்டிச் செல்பவர்கள்.
எங்கு நல்ல உணவு கிடைக்கும் என்று விசாரித்தால், சுட்டுவிரலைக் காட்டிச் சொல்லிச் செல்பவர்களும் இவர்களே.
மரணம் நிகழ்ந்த வீடுகளில், உறவினர்களே சடங்காகப் பார்த்துவிட்டுச் செல்கின்றபோது, பூதஉடலை எடுக்கும்வரை உடன் இருப்பவர்கள் அவர்கள். முன்பின் தெரியாதவர்கள் இழப்புக்கும் குரலெடுத்து அழுபவர்கள் அவர்கள்.