

ஒரு மருத்துவக் கல்வி ஆசிரியராக, மாணவர்களின் கற்றல் முறைகளில் சில முக்கியமான மாற்றங்களை அண்மைக்காலத்தில் பார்க்கிறேன். இன்றைய மாணவர்கள், வகுப்பில் நடத்தப்படும் மரபான விரிவுரைகளில் ஆர்வமின்றி இருக்கிறார்கள்; பாடப்புத்தகங்களைப் படிப்பதைவிடச் சிறு சிறு குறிப்புகளைப் படிப்பதை விரும்புகிறார்கள், வலையொலி (பாட்காஸ்ட்), காணொளித் தொகுப்புகள் வழியான வகுப்புகளை ஈடுபாட்டோடு கவனிக்கிறார்கள். ஆனால், ஆசிரியர்கள் எடுக்கும் வகுப்புகளில் கவனமின்றி அமர்ந்திருக்கிறார்கள். ஏன்?
கவனம் இல்லையா?
இன்றைய குழந்தைகள் கற்றுக்கொள்ள விரும்பவில்லையா அல்லது ஆசிரியர்களிடம் வகுப்பில் கற்றுக்கொள்ள விரும்புவதில்லையா?
உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன, கற்றலின் வடிவங்கள் மாறிவிட்டன. ஆனால், நமது வகுப்பறை மட்டும் இன்னமும் மாறாமல் அப்படியே இருக்கிறது.
ஆசிரியர்களைக் கேட்டால் இன்றைய மாணவர்களுக்குக் கவனமோ, பொறுமையோ, ஆர்வமோ இல்லை எனக் குறைகளாக அடுக்குவார்கள். ஆனால், அதே மாணவர் ஒரு கிரிக்கெட் போட்டியை மூன்று மணி நேரம் பார்க்கிறார்; ஓர் இணையத் தொடரை ஒரே நாளில் பார்த்துமுடித்துவிடுகிறார்.
அப்படியானால் பிரச்சினை கவனத்திறன் இல்லாதது மட்டுமா அல்லது கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் இல்லாததா? பல நூற்றாண்டுகளாகக் கல்வி முறை மரபான ஒன்றாகவே இருந்துவந்தது. அறிவு என்பது அரிதானது, ஆசிரியரிடம் இருந்து கற்றுக்கொள்ளக்கூடியது. புத்தகங்கள்தான் அறிவின் அடிப்படை. அதைக் குழந்தைகளின் மனதில் பதியவைக்க வேண்டும் - இதுதான் கல்வி என்று நாம் அறிந்திருந்தோம்.
மாறிப்போன மரபு
ஆனால், செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு இந்த மரபுகள் தலைகீழாக மாறிவிட்டன. இன்று, அறிவு என்பது ஜனநாயகப்படுத்தப்பட்டுவிட்டது. ஆசிரியர்களைவிட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதிகமாகக் கற்றுக்கொடுக்கிறது.
புத்தகங்களைத் தாண்டி நாம் கற்றுக்கொள்ள ஏராளமாக இருக்கின்றன. மனப்பாடம் செய்யவேண்டிய தேவை இப்போது இல்லை. ஆனால் நம்முடைய வகுப்பறைகள் இன்னும் பழைய வழிமுறைகளையே கொண்டிருக்கின்றன.
சிறு காணொளிகள், அசைபடங்கள் (அனிமேஷன்), இணைய வகுப்புகள், வலையொலி என இந்த நவீன உலகத்தில் வாழும் குழந்தையை நூறு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட வகுப்பறை அமைப்புக்குள் உட்காரவைத்து, ஒரு மணி நேரம் அமைதியாகக் கேட்கச் சொல்வது எந்த அளவுக்குச் சாத்தியம்?
இன்றைய குழந்தைகள்
நமது கல்வி அமைப்பு இன்னும் தொழிற்புரட்சி காலத்திய தர்க்கத்தின் அடிப்படையில் இருக்கிறது. ஒரே வயது, ஒரே பாடம், ஒரே தேர்வு, ஒரே மதிப்பீடு, ஒரே வெற்றி வரையறை. ஆனால், இன்றைய குழந்தைகள் அப்படி இல்லை.
அவர்கள் பல்வேறு கற்றல் பாணிகளைக் கொண்டிருக்கிறார்கள், பல்வேறு ஆர்வங்களைக் கொண்டிருக்கிறார்கள், பல்வேறு திறன்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய இந்த மாறுபட்ட தேவைகளைப் பற்றிச் சிந்திக்கும் கல்வி அமைப்புதான் இன்றைய காலத்தில் அவசியம்.