

இந்தியாவுக்கு வரலாறு கிடையாது. வரலாறு என்றால் என்னவென்றுகூட இந்தியர்களுக்குத் தெரியாது. தொன்மக் கதைகளைத்தான் அவர்களால் விவரிக்க முடிகிறது. ஏடு எழுதும் வழக்கம் இல்லை. அப்படியே ஏதேனும் அகப்பட்டாலும் அதில் கடவுள்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்.
இன்னின்ன மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள், அவர்களுடைய வம்சாவளி இது, அவர்கள் மேற்கொண்ட போர்கள் இவை என்றெல்லாம் அவர்களால் நினைவுபடுத்திச் சொல்ல இயலவில்லை. உண்மையாகவே இந்தியா - ஐயோ, பாவம்தான்! இந்தியா குறித்த மேற்படி சித்திரத்தை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர் ஜேம்ஸ் மில்.
நவீன இந்தியாவின் வரலாற்றை முதன்முதலில் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர். 1807 தொடங்கி 12 ஆண்டுகள் செலவிட்டு மூன்று பாகங்களில் அவர் எழுதிய பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு பெரும் எண்ணிக்கையில் விற்பனையானதோடு செல்வாக்குமிக்க ஓர் ஆவணமாகவும் உடனடியாக மாறிப்போனது.
இந்தியாவைத் தெரிந்துகொள்ள மில்லை நாடுங்கள் என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு அவருக்குப் புகழையும் கொண்டுவந்து சேர்த்தது. மில்லின் வாழ்க்கையையும் இந்தியாவின் வாழ்க்கையையும் ஒருசேர மாற்றியமைத்த இந்நூலால் கவரப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அவரை வரவேற்று ஒரு முக்கியப் பொறுப்பையும் நல்ல சம்பளத்தையும் வழங்கியது.
மில்லின் வரலாறு கிழக்கிந்திய நிறுவனத்துக்குப் பிடித்திருந்ததற்கான காரணங்கள் வெளிப்படையானவை: இந்தியா பிற்போக்கான பிரதேசம் என்று வலியுறுத்துவதன்மூலம் அந்நாட்டை ஆள்வதற்கான தார்மிக நியாயத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். ‘இந்தியாவின் இருளைப் போக்க வந்த அறிவொளி நாங்கள். கல்வியென்றால் என்ன என்பதை நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம்.
இந்தியர்கள் வரலாற்றுணர்வு அற்றவர்கள். புதிய வரலாறு படைப்பதற்கே நாங்கள் பிறப்பெடுத்து வந்திருக்கிறோம்’ என்கிற மனநிலை. ஜேம்ஸ் மில் (1773-1836) ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். பொருளாதாரம், தத்துவம், வரலாறு ஆகியவற்றில் நாட்டம் கொண்டவராக வளர்ந்தார்.