

1959 ஜனவரி 1 அன்று ஃபிடெல் காஸ்ட்ரோ, சே குவாரா ஆகிய இரண்டு இளம் புரட்சியாளர்களின் தலைமையில், அஞ்சா நெஞ்சம் கொண்ட இளம் புரட்சியாளர்களால் மேற்குலகின் விடிவெள்ளியாக கியூபப் புரட்சி (Cuban Revolution) வெற்றியடைந்தது.
வட அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய இப்புரட்சி, உற்பத்திச் சாதனங்களைச் சமூகமயமாக்கி, நிலச்சீர்திருத்தம், தொழில் துறை தேசியமயமாக்கல் ஆகியவற்றின் மூலம் வர்க்கச் சுரண்டலை ஒழித்தது.
தற்சார்புப் பொருளாதாரத்தை அமைத்துக் கல்வி, மருத்துவம், உணவு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அடிப்படை உரிமைகளாக்கியது. வர்க்க ஏற்றத்தாழ்வுகளையும் வறுமையையும் சமூகக் குற்றங்களையும் அறவே துடைத்தெறிந்தது.
சமத்துவ அரசு
‘சோசலிச விழுமியங்களை மக்களிடம் வளர்த்தெடுத்து, புதிய மனிதனை உருவாக்குவதே புரட்சியின் கடமை’ என்றார் சே குவாரா. கியூபாவில் இதற்கெனப் பல ஆண்டுகள் செலவிடப்பட்டன.
கல்வி, பண்பாடு, அற உணர்வு, மனித நேயம் ஆகியவற்றில் சிறந்த சமூகமாக கியூபச் சமூகம் உருவாக்கப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நெஞ்சுரமும் இருந்தால் சிறிய நாடும் சாதிக்கலாம் என்பதை உலகுக்கு கியூபா நிரூபித்தது.
கியூபாவின் தந்தை ஹோசே மார்த்தி, பெரு நாட்டு மார்க்சிய அறிஞர் மரீயாதெகீ ஆகியோரின் சிந்தனைகளை உள்வாங்கி, தொழிலாளர்களோடு பழங்குடியினர், கலப்பினத்தவர் உள்ளிட்டோரையும் இணைத்த வீரியமிக்க லத்தீன் அமெரிக்க மார்க்சியத்தை கியூபா வரித்துக்கொண்டது.
காஸ்ட்ரோவும் சேவும் தீவிரமான மார்க்சியப் பற்றுறுதி மிக்கவர்களாக இருந்தபோதிலும், கியூபப் புரட்சி ஆரம்பத்தில் கம்யூனிசப் புரட்சி என அறிவிக்கப்படவில்லை.
ஆனால், சிஐஏ-வின் பொருளாதாரத் தடைகளுக்கும் நாச வேலைகளுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, மிகச் சரியான ஒரு தருணத்தில், “நான் ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்” என காஸ்ட்ரோ அறிவித்தார்.
‘மனித குலமே எமது தாய்நாடு’ என்கிற மார்த்தியின் உயரிய பண்பாட்டைப் பின்பற்றி ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்கு கியூபா உதவியதோடு, தென்னாப்ரிக்க நிறவெறி அரசுக்குச் சாவுமணி அடிப்பதற்கும் பேருதவி செய்தது.