

ஈ.பி.தாம்ஸன் (Edward Palmer Thompson (1924-1993) வரலாற்றுத் துறையில் நிகழ்த்திய சாதனையைப் புரட்சி என்னும் ஒரு சொல்லால்தான் அழைக்க முடியும். அடியோடு புரட்டிப்போடுதல் என்பது களத்தில் நிகழ்த்தப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சிந்தனை அளவில் நிகழ்த்துவதும்.
அதனால்தான் வெளிவந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் ஆங்கிலேய உழைக்கும் வர்க்கத்தின் உருவாக்கத்தை ஆராயும் தாம்ஸனின் பிரம்மாண்டமான படைப்பை இத்துறையைச் சார்ந்தவர்கள் இன்றும் ஒரு கைவிளக்காகப் பாவித்துவருகிறார்கள். தாம்ஸன் ஒரு மேதை; அவருடைய பங்களிப்பு தனித்துவமானது என்கிறார் சக வரலாற்றாளர் எரிக் ஹாப்ஸ்பாம்.
கீழிருந்து அணுகும் போக்கை வரலாற்றில் நிலைநாட்டியவர் தாம்ஸன். சமூக வரலாறு என்னும் புதிய துறைக்கு அடித்தளம் இட்டதோடு ஓர் உறுதியான கோட்பாட்டுக் கட்டுமானத்தையும் உருவாக்கி அளித்தவர். சமூகப் பண்பாட்டு வரலாற்றை ஆராய்பவர்களில் அவருடைய தாக்கத்துக்கு ஆளாகாதவர்களைக் காண்பது அரிது.
தலைசிறந்த ஆய்வாளர் என்றாலும் தாம்ஸன் முனைவர் பட்டம் பெற்றவரல்லர். பல வரலாற்றாளர்களை உருவாக்கியவர் என்றாலும் அவர் பேராசிரியராகப் பணியாற்றிய காலம் குறைவு. கல்விக்கூடத்திலிருந்து இயன்ற அளவு ஒதுங்கியிருப்பது என்பது அவருடைய தேர்வு. ‘நான் கவனம் செலுத்துவது அடித்தட்டில் இருப்போர்மீது.
அவர்கள் வாழ்வை, கனவை, துயரை, கசப்பை, இழப்பை, அரசியலை, போராட்டக் குணத்தைப் பதிவுசெய்ய வேண்டும் என்றால் அவர்கள் வாழும் உலகில் அல்லவா நான் வாழ வேண்டும்? பல்கலைக் கழக வளாகத்துக்குள் வசதியாக அமர்ந்துகொண்டு எப்படி அடித்தட்டு மக்களின் வரலாற்றை எழுத முடியும்?’ என அவர் கேள்வி எழுப்பினார்.
எனவே, தாம்ஸன் உழைக்கும் வர்க்கத்தோடு தன்னைக் கரைத்துக்கொண்டார். வர்க்கம் என்பதன் பொருளைச் செழுமைப்படுத்தினார். ஏழைகளை ஏழைகளாக அல்ல, சிந்திக்கும் ஆண்களாக, சிந்திக்கும் பெண்களாக அடையாளம் கண்டார்.
முகமற்ற, அடையாளமற்ற மக்களின் வாழ்க்கைமுறையை அகழாய்ந்து வெளியில் கொண்டுவந்ததன்மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்ததோடு, வாழ்ந்த காலத்தில் அவர்கள் பெற்றிருக்க வேண்டிய சமூக மதிப்பைத் தாமதமாகவாவது பெற்றுத் தந்தார். தாம்ஸனின் பணி எத்தகையது என்பதை உணர ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.