

தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய தளகர்த்தர்கள்
இந்தியாவின் ஆட்சி மொழியாக அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியை கொண்டு வந்தாக வேண்டும் என்று பிரதமர் நேரு தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கேற்றவாறு அனைத்துத் துறைகளிலும் இந்தி மொழி கொண்டுவரப்பட்டது. இது இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்தில் அடித்தட்டு, கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடுவது என திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலைவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்தனர். அந்த வகையில் இரண்டாவது முறையாக இந்தி எதிர்ப்பு போராட்டம் 1952 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் பற்றிப் பரவியது. இந்தப் போராட்டத்தில் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கெடுக்கும் என்று அண்ணா உறுதிபட தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து கலைஞர் தலைமையில் இசைமுரசு நாகூர் அனிபா, எம்.எஸ்.மணி, எஸ்.நெடுமாறன், புதுக்கோட்டை புலவர் துரை மதிவாணன் உள்ளிட்டோர் திருச்சியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழிக்க புறப்பட்டனர். அதேபோல் ஈரோட்டில் நடந்த போராட்டத்தில் அண்ணா கலந்து கொண்டார். இவ்வாறு ஆங்காங்கே உள்ள முக்கியத் தலைவர்கள் தலைமையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
ஏற்கெனவே தமிழகத்தில் 1938-ம் ஆண்டு இந்தி திணிப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழறிஞர்கள் மறைமலையடிகள், திருவிக, நாவலர் சோமசுந்தர பாரதி, ஈழத்தடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள், மூத்த முன்னோடிகள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தி திணிப்பு போராட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் போராட்டத்தில் பங்கெடுக்கச் செய்யும் நோக்கத்தில், நாவலர் சோமசுந்தர பாரதியார், தென் தமிழகத்திலிருந்து சென்னை வரை நடைபயணமாக பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
சென்னையை வந்தடைந்தவுடன், மெரினா கடற்கரையில் நடைபயணத்தின் நிறைவுக் கூட்டத்தை மறைமலையடிகளாரின் புதல்வி நீலாம்பரி அம்மையார் முன்னின்று நடத்தினார். இதில் பெரியாரும் கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து 3-வது முறையாக 1965-ம் ஆண்டு மாணவர்கள் முன்னின்று இந்தி திணிப்புப் போராட்டத்தை கையிலெடுத்தனர். இது திமுகவினர் போராட்டம் அல்ல; மாணவர்களின் போராட்டம் என்று அண்ணா அப்போது தெரிவித்தார். அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பக்தவத்சலம் இருந்தார். உள்துறை அமைச்சராக கக்கன் இருந்தார். மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதெல்லாம் இந்தி திணிப்பு எதிர்ப்புக்கான தமிழக வரலாற்றில், அழிக்க முடியாத வடுக்களாக நிலைபெற்று விட்டன.
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த சமயத்தில் 9.3.1964-ல் இதுதொடர்பாக சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் திமுக உறுப்பினர் செ.மாதவன் பேசினார். அந்த விவாதம் வருமாறு:
செ.மாதவன்: சில தினங்களுக்கு முன்னால் முதலமைச்சர், இந்தி மொழிப் பிரச்சினைப் பற்றி சபையில் விவாதிக்கலாம் அங்கத்தினர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்லலாம் என்றார். அதோடு மும்மொழிக் கொள்கை சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வந்து அரசாங்கம் ஒரு உத்தரவைப் போட்டிருக்கிறது. ஜனநாயக முறையில் உள்ள நல்ல பண்பை முதல் அமைச்சரே பின்பற்றவில்லை என்பதை அவருடைய வார்த்தைகளே எடுத்துக்காட்டுகின்றன. இந்தியைப் படிக்காதவர்கள் விரும்பாதவர்கள் பாகிஸ்தானுக்குப் போகலாம் என்றார்கள்.
முதல்வர் எம்.பக்தவத்சலம்: பண்பைப் பற்றி அங்கத்தினர்களிடம் நான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. நான் கூறாததைக் கூறுவது பண்பா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இந்தியைப் படிக்காதவர்கள் பாகிஸ்தானுக்குப் போகலாம் என்றா நான் சொன்னேன்? இந்தி படிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஆனால் மும்மொழிக் கொள்கையில், இந்தியை எடுத்துக் கொள்ளலாம். அல்லது வேறு மொழிகள் கற்கலாம். ஆனால் இந்தியைக் கற்க முற்படுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களை, விரும்பாதவர்கள் தடுப்பது தவறு.
இந்தியை தாங்கள் விரும்பவில்லை என்பதற்காக வேறு யாரும் படிக்கக் கூடாது என்று தடுப்பவர்கள், சொல்பவர்கள், அத்தகைய மனப்பான்மை உள்ளவர்கள் பாகிஸ்தானுக்குப் போகலாம் என்றேனே தவிர விரும்பாதவர்கள் போகலாம் என்று சொல்லவில்லை.
செ.மாதவன்: முதல் அமைச்சர் கொடுக்கும் விளக்கம் வேடிக்கையான விளக்கமாகத்தான் இருக்கிறது. இந்தியைப் பிடிக்காதவர்கள் , ‘இந்தி வேண்டாம், படிக்காதீர்கள்’ என்று வற்புறுத்துவது தவறு என்கிறார்கள். அப்படி எங்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் எண்ணம் நம் முதலமைச்சருக்கு எப்பொழுது வந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எம்.பக்தவத்சலம்: மேலும் விளக்கம் கூற விரும்புகிறேன். நாங்கள் படிக்க விரும்பவில்லை என்பதற்காக வேறு யாரும் படிக்கக் கூடாது என்று தடுப்பது ஜனநாயகத்துக்கு முரண்பட்ட கருத்து. இங்கே ஜனநாயகம் நடைபெறுகிறது. முரண்பட்ட கருத்துகளை உடையவர்கள், பிடிக்கவில்லை என்பவர்கள் ஜனநாயகம் இல்லாத இடத்திற்குப் போகலாம் என்பதுதான் என் விளக்கம்.
செ.மாதவன்: இந்தி ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது இன்னும் விவாதத்தில் இருக்கும் பிரச்சினை. அதில் கருத்துத் தெரிவிப்பது ஜனநாயகத்துக்கு முரண்பட்டது என்றால் முதல் அமைச்சர் நமக்கு ஒரு புதிய ஜனநாயகத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறார். நாங்கள் பணிவோடு அவர்களைக் கேட்டுக் கொண்டோம். தாங்கள் டெல்லிக்குப் போகிறீர்கள். அங்கே எங்களுடைய கருத்துகளை, தமிழகத்தின் கருத்துகளை எடுத்துப் பேச வேண்டும்.அந்த அடிப்படையில் தீர்வு காணவேண்டும்.
எம்.பக்தவத்சலம்: ‘எங்களுடைய கருத்து’ என்பதற்கும் ‘தமிழகத்தின் கருத்து’ என்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
இதேபோல், இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து, தமிழ்நாட்டின் மொழி உரிமைகளுக்காக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பலமுறை அண்ணா பேசியுள்ளார். குறிப்பாக, இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்த காலகட்டத்தில், 1963-ல் மாநிலங்களவையிலும், பின்னர் 1965-ல் தமிழ்நாட்டின் சட்டசபையிலும் இந்தித் திணிப்பின் அநீதியை விளக்கி, 'இந்திக்கு அடிமையாவதை விட, தமிழே எங்கள் உரிமை, அது எங்கள் கவுரவம்' என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினார்,
1963-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்தி திணிப்பு முயற்சிகள் தொடர்வதைக் கண்டித்ததோடு, இந்திய ஒற்றுமைக்காக இந்தியைத் திணிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டின் மொழி உணர்வுகளைப் புரிந்துகொண்டு, இந்தி திணிப்பு என்பது தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் வாதிட்டார்.
1965-ல் வெடித்த போராட்டங்களின்போது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர்த் தியாகம் செய்ததைக் குறிப்பிட்டு, தமிழக சட்டப்பேரவையிலும், இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகளைத் தனது பேச்சுகளில் பிரதிபலித்தார்.
மேலும், ‘தென்னாட்டில் உண்டான கிளர்ச்சிகளைத் தி.மு.கழகம்தான் தூண்டி விட்டது’ என்று சிலர், ஆர அமர யோசிக்காமல் பழிச் சொற்களை அள்ளி வீசியபோதிலும், தலைமையமைச்சர் லால் பகதூர், அத்தகைய அவசர முடிவுக்கு வர மாட்டார் என்று நினைக்கிறேன்.
எனது கட்சிக்கு வாய்ப்புத் தரப்பட்டால், எங்களது குற்றமற்ற தன்மையைத் தலைமையமைச்சர் கண்டு கொள்ளும்படிச் செய்ய முடியும்.
பலாத்காரம் பற்றியோ, அது கலந்த கிளர்ச்சி பற்றியோ, நாங்கள் ஒரு அறிக்கையோ - கட்டுரையோ - தலையங்கமோ - இதுவரை தீட்டியது கிடையாது; பேச்சிலும் எழுத்திலும் துளிக்கூட நாங்கள் ஆதரவு காட்டியதுமில்லை - தூண்டிவிடவுமில்லை. உள்ளத் தூய்மையுடன் கூறுகிறேன் - ஒரு நியாயமான முடிவை அமைதியான முறையில் காண வேண்டுமென்று நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ‘மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது’ என்று நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கிறோம்!
அரசியல் நிகழ்ச்சிகளிலோ, போராட்டங்களிலோ ஈடுபடுமாறு மாணவர்களை நாங்கள் அழைத்தது கிடையாது. நான் இங்கு வெளிப்படையாகக் கூறுவேன் - தலைமையமைச்சர் சார்ந்திருக்கும் கட்சிதான், மாணவர்களை அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறி நடந்தது. தஞ்சாவூரில் அதற்காக ஒரு மாநாடு கூட்டி, காங்கிரசுத் தலைவர்கள் அதில் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினர் என்று அண்ணா உணர்ச்சி பொங்கப் பேசினார்.
1965-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 1967-ல் திமுக வெற்றி பெறுவதற்கு வழிவகுத்தது. அந்தப் போராட்டத்தில் முதல்வர் பக்தவத்சலம், உள்துறை அமைச்சர் கக்கன் மற்றும் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்து பேசப்பட்டது. அண்ணாவோ, மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தார்.
மாணவர்கள் நடத்திய போராட்டத்தை முன்னெடுத்தவர்களுள் முக்கியமானவர் பெ.சீனிவாசன். (இவர்தான் 1967-ல் நடைபெற்ற தேர்தலில் காமராஜரை தோற்கடித்தவர்.) மாணவர்களின் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்க பெ.சீனிவாசன் அங்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து கல்கத்தா பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்து இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கோருவது என திட்டமிட்டிருந்தார். இத்தகைய சூழலில் பெ.சீனிவாசன் சென்னையில் இல்லாத சமயத்தில், இந்தி போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது என்று எல்.கணேசன் அறிக்கை வெளியிட்டார். இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த பெ.சீனிவாசன் உடனடியாக சென்னை திரும்பினார்.
முதல் வேலையாக எல்.கணேசனைச் சந்தித்தார். அவரிடம், “என்ன எல்.ஜி. இப்படி பண்ணிட்டீங்க..? இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த நான் எந்த அளவுக்கு முயற்சி எடுத்து வருகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாதா..? மேலும் போராட்டத்தை விலக்கிக் கொள்வது பற்றி மாணவர்களிடம் கருத்து கேட்க வேண்டாமா? இப்படி தன்னிச்சையாக அறிவித்தது நேர்மையான நடவடிக்கையா?” என்று வாக்குவாதம் செய்தார்.
அதற்கு எல்.கணேசன், “போராட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி அண்ணா சொன்னார்... கலைஞர் சொன்னார்...” என்றெல்லாம் மழுப்பலாகக் கூறினார்.
இதைக் கேட்டவுடன் உடனடியாக அண்ணாவை அவரது வீட்டில் சந்தித்தார் பெ.சீனிவாசன். அண்ணாவிடம் “என்ன அண்ணா... இப்படி நடந்து விட்டதே... நான் இந்தப் போராட்டத்தை தீவிரமாக கொண்டு செல்ல வேண்டும் என்று இருந்தேனே...” என்று வருத்தப்பட்டார். அதற்கு அண்ணா, “இல்லையில்லை... மாணவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அதனால்தான் இந்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தேன்” என்று அண்ணா கூறியுள்ளார். இதை என்னிடம் பெ.சீனிவாசனே பலமுறை சொல்லி வருத்தப்பட்டதுண்டு.
இன்றைக்கு பெ.சீனிவாசனும் இல்லை, எல்.கணேசனும் இல்லை... அண்ணாவும் இல்லை...
தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய தளகர்த்தர்கள்
பெ.சீனிவாசன் அருமையான பேச்சாளர். எம்.ஏ.பி.எல் படித்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றுள்ளார். திடகாத்திரமான உடல்வாகு பெற்றவர். அவருடைய பேச்சு மக்களைக் கவருவதாகவும், உத்வேகம் கொடுப்பதாகவும் இருக்கும். துணை சபாநாயகர் என்ற பொறுப்பு என்ற நிலையிலேயே அரசியலில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். அதோடு அவரது அரசியல் வாழ்க்கையும் முற்றுப்பெற்றது.
மொழிப்போர் பற்றி இன்றைக்கு ‘பராசக்தி’ என்ற திரைப்படம் வெளிவந்து பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு கலைஞர் கதை வசனத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ 1952-ம் ஆண்டில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள், பகுத்தறிவுக் கருத்துகள் பேசப்பட்டன.
இன்றைக்கு மீண்டும் வந்துள்ள ‘பராசக்தி’ படம் இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தைப் பேசுவதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படத்தில் பல விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. மாணவர் போராட்டம் பற்றி முழுமையாக இல்லை. அதில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களைப் பற்றிய எந்த தகவல்களும் அதில் சொல்லப்படவில்லை.
குறிப்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மாணவர் ராஜேந்திரனைப் பற்றியும் சரியான தகவல்கள் சொல்லப்படவில்லை. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பிஎஸ்பி, எஸ்எஸ்பி, பார்வர்டு பிளாக் கட்சிகளைச் சேர்ந்த மாணவர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
இந்தி திணிப்புப் போராட்டத்தின் முக்கிய தளகர்த்தராக விளங்கிய பெ.சீனிவாசன் பற்றியோ, எல்.கணேசன், காளிமுத்து, ரகுமான்கான், ஜெயப்பிரகாசம், ராமன் என எத்தனையோ பேர் அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். அவர்களைப் பற்றி எந்தக் குறிப்பும் இப்படத்தில் இடம்பெறவில்லை என்பது அன்றைய போராட்டம் பற்றி அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது.
திமுகவில் எம்ஜிஆரை அறிமுகப்படுத்திய நாராயணசாமி:
1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு முக்கியக் காரணிகளில் ஒன்று, தேர்தல் சமயத்தில் எம்ஜிஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம். அண்ணா தனது பேச்சாற்றலாலும், கலைஞர் தன்னுடைய எழுத்தாற்றலாலும் பொதுமக்களைக் கவர்ந்தாலும், அடித்தட்டு மக்களையும் தன்னுடைய வசீகரத்தால் கவர்ந்தவர் எம்ஜிஆர் என்று சொன்னால் மிகையில்லை.
திரைப்படங்கள் மூலம் திமுகவின் கருத்துகளை, கொள்கைகளை பாடல்களாலும், வசனங்களாலும் கிராமப்புறங்கள் வரை கொண்டு சென்றவர் எம்ஜிஆர். ஆரம்பத்தில் எம்ஜிஆர் தீவிர காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தார். அவர் எவ்வாறு திமுகவில் ஐக்கியமானார் என்பது குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.
எம்ஜிஆரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகமணி டி.வி.நாராயணசாமி. பொதுவாகவே பல பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் தென்னகத்து மண் திருநெல்வேலி. அண்ணாவாலும், மக்களாலும் ‘டி.வி.என்’ என அன்புடன் அழைக்கப்பட்ட நடிக மணி டி.வி.நாராயணசாமி, எட்டையபுரம் அருகில் உள்ள, சி.துரைச்சாமிபுரம் என்ற சிற்றூரில் 1921-ல் பிறந்தார். டி.கே.எஸ் சகோதரர்களின் மதுரை பால சண்முகானந்த சபாவில் 1936-ம் ஆண்டுசேர்ந்து, புராண, சரித்திர, சமூக, நாடகங்களில் நடித்து புகழ் பெற்றார்.
‘சந்திரோதயம்’ நாடகத்தில் அண்ணாவுடன் சேர்ந்து சீர்திருத்த வாலிபனாக நடித்தார் டி.வி.நாராயணசாமி. அவரது நடிப்பைக் கண்டு அண்ணா, பெரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் வியந்து பாராட்டினார்கள்.
நடிகமணி டி.வி.நாராயணசாமியுடன் எம்ஜிஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர்.
அண்ணாவின் ‘ஓர் இரவு’ நாடகத்தின் 50-வது நாள் வெற்றி விழாவில், அண்ணா பேசும்போது, “மேடைப் பேச்சாளனாக, எழுத்தாளனாக இருந்துவந்த எனக்கு, முதன்முதலில் கலை உலகை பற்றி சிந்திக்கத் தூண்டியவர், நடிகமணி டி.வி.நாராயணசாமிதான்” என பெருமையோடு பாராட்டினார்.
இதற்கிடையே, வரலாற்றுச் சிறப்புமிக்க பல நாடகங்களை எழுதி, புகழ் பெற்ற அண்ணா, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ எனும் நாடகத்தை எழுதி, நடிகமணி டி.வி.நாராயணசாமியிடம் கொடுத்து, ‘தம்பி உனக்காக ஒரு நாடகம் எழுதியுள்ளேன், படித்துப்பார்’ என்றார். நாடகத்தைப் படித்துப் பார்த்த நாராயணசாமி, “அண்ணா... இந்த நாடகம் நமது கொள்கை முரசாக விளங்குகிறது, விரைவில் அரங்கேற்ற வேண்டும்” என்றார்.
அதைத்தொடர்ந்து அந்த நாடகத்தில் சிவாஜி வேடத்தில் நடிப்பதற்கு சிறந்த நடிகரை தேடிக் கொண்டிருந்தார், அப்போது அவருடன் பாசத்துடன் பழகிய, எம்.ஜி.ராமச்சந்திரனை, அண்ணாவிடம் அழைத்துச் சென்று, “சிவாஜி வேடத்தில் நடிப்பதற்கு பொருத்தமானவர் இவர்தான்” என்று அறிமுகப்படுத்தினார்.
ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால், அந்த நாடகத்தில் எம்ஜிஆர் நடிக்க முடியாமல் போனது. அப்போது, அண்ணாவின் ‘திராவிட நாடு’ அலுவலகத்தில் தங்கியிருந்த, நாடக நடிகர் வி.சி.கணேசனை அழைத்துச் சென்று, சிவாஜி வேடத்துக்கு இவரைப் போடலாம் என்று அறிமுகப்படுத்தினார், நாராயணசாமி.
சென்னை ஜெயின்ட் மேரீஸ் மண்டபத்தில், பெரியார் தலைமையில் 1945-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் நாள் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகம் அரங்கேறியது. சிவாஜி கதாபாத்திரத்தில் வி.சி.கணேசன் நடித்தார். அவரது நடிப்பைக் கண்டு வியந்த பெரியார், சிவாஜியை கண் முன்னே நிறுத்திய வி.சி.கணேசனை இனி ‘சிவாஜி’கணேசன் என்று அழைப்பதுதான் சிறப்பானது என்று பாராட்டிப் பேசினார். அன்றில் இருந்துதான் சிவாஜி கணேசன் ஆனார் வி.சி.கணேசன்.
அண்ணாவுடன் ஏற்பட்ட அறிமுகம் எம்ஜிஆரை திராவிட இயக்கம் பக்கம் திரும்பச் செய்தது. அண்ணாவின் பேச்சாற்றலைக் கண்டு வியந்த எம்ஜிஆர், திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதற்கு மூல காரணமாக இருந்தவர் டி.வி.நாராயணசாமிதான்.
எம்ஜிஆர் மட்டுமல்ல, கலை உலக தங்கங்களான கே.ஆர்.ராமசாமி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரையும் அண்ணாவிடம் ஐக்கியப்படுத்தி, அவர்களுக்கு அரசியலில் ஆர்வத்தை ஏற்படுத்தி, ஒரு திருப்புமுனையை உருவாக்கியவர் டி.வி.நாராயணசாமி என்றால் மிகையல்ல!
(தொடர்வோம்...)