

கடந்த ஆகஸ்ட் 19 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) ஆண்டுக் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனுடன் பல்வேறு அரசு மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை மையங்கள் ஆகியவற்றுக்கான கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், காப்பீட்டுத் தொகையை ஐந்து மடங்கு உயர்த்துவதே மருத்துவப் பாதுகாப்பின் முக்கிய அளவுகோலாக முன்னிறுத்தப்படுவது சரியாகத் தோன்றவில்லை.
ஒரு மருத்துவமனையில் போதுமான மருத்துவர், செவிலியர், ஆய்வகப் பணியாளர் (Lab Technician), மருந்து, படுக்கை அல்லது கருவிகள் இல்லாதபோது, காப்பீட்டு அட்டையில் இருக்கும் தொகை நோயாளிக்கு என்ன பயனைத் தரும்? காப்பீடு என்பது சிகிச்சைக்கான பணத்தைச் செலுத்தும் ஒரு முறை; மருத்துவக் கட்டமைப்பு என்பது சிகிச்சையை வழங்கும் அமைப்பு. இரண்டையும் ஒன்றாகக் கருதுவது கொள்கைரீதியாகத் தவறு.
புள்ளிவிவரம் சொல்லும் உண்மை
தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் 80ஆவது சுற்று, 2025ஆம் ஆண்டுக்கான சுகாதார அறிக்கையின்படி, 2017–18இல் கிராமப்புறங்களில் 14.1%, நகர்ப்புறங்களில் 19.1%ஆக இருந்த மருத்துவக் காப்பீட்டுப் பரவல், 2025இல் கிராமப்புறங்களில் 47.4%ஆகவும், நகர்ப்புறங்களில் 44.3%ஆகவும் உயர்ந்துள்ளது.
இருந்தபோதும், மகப்பேறு சிகிச்சையைத் தவிர்த்து, ஒரு மருத்துவமனை அனுமதிக்கான சராசரிச் சொந்தச் செலவு ரூ.34,064 ஆக உள்ளது. அதே அறிக்கையில், அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சைக்கான சராசரிச் செலவு ரூ.6,631; தனியார் மருத்துவமனையில் ரூ.50,508 எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மகப்பேறு சிகிச்சையில் அரசு மருத்துவமனை ரூ.2,299, தனியார் மருத்துவமனை ரூ.37,630. வெளிநோயாளிகளுக்கான சிகிச்சையில் அரசு மருத்துவமனையின் சராசரிச் செலவு வெறும் ரூ.289; அதன் இடைநிலை மதிப்பு பூஜ்ஜியம்.