

கோப்புப் படம்
‘தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலா தொடர்பான கொள்கை அல்லது மானியம் ஏதேனும் இருக்கிறதா?’ - மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், கோவா மாநிலங்களின் வேளாண் சுற்றுலா தொடர்பான அரசின் கொள்கை, மானியம் போன்றவை பற்றி நான் உரையாற்றும் போதெல்லாம் நம் விவசாயிகள் எழுப்பும் முக்கியக் கேள்வி இது.
தனிப்பட்ட வகையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே விவசாயிகள் வேளாண் சுற்றுலா நடத்திவருவதை எடுத்துச்சொல்லி, தமிழ்நாடு அரசு வேளாண் சுற்றுலாவுக்கான கொள்கையைக் கூடிய விரைவில் வகுக்கும் என்று பொதுவாகப் பதில் சொல்வேன். எனினும், சமூகப் பொருளாதாரரீதியாகவும் ஊரக அளவிலும் முன்மாதிரியான கொள்கைகளை வகுக்கும் தமிழ்நாட்டில் இந்த முன்னெடுப்பு ஏன் தாமதமாகிறது என்னும் கேள்வி தவிர்க்க முடியாததுதான்.
ஏன் வேளாண் சுற்றுலா முக்கியம்? - பொதுவாக, வேளாண் சுற்றுலா என்பதை, ‘வேளாண் பண்ணையில் சுற்றுலாப்பயணிகளைத் தங்கவைத்து, அவர்களுக்கு உணவளித்து, வேளாண் பணிகளில் ஈடுபட வைத்து, அதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே’ என்று உலகச் சுற்றுலா நிறுவனம் கூறுகிறது.
கூடவே, வேளாண் அறுவடையைக் கொண்டாடுவது, தோட்டத்தில் விளைந்த பழங்கள், காய்கறிகளைத் தேவையான அளவில் சுற்றுலாப்பயணிகளே அறுவடை செய்ய அனுமதிப்பது, பண்ணைக் குட்டைகளில் மீன் பிடிப்பது, ஊரக வேளாண் சந்தையைப் பார்வையிடுவது, கிராமப்புறக் கைவினைக் கலைஞர்களிடம் பொருள்கள் வாங்குவது, மாணவர்களுக்கு வேளாண்மை சார்ந்த வகுப்புகளை நடத்துவது எனப் பலவற்றையும் உள்ளடக்கியது வேளாண் சுற்றுலா.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களைக் கொண்டும் இதை வளப்படுத்த முடியும். ஐவகை நிலங்களை விளக்கிக்கூறும் தொல்காப்பியர், அந்தந்த நிலங்களுக்கான கருப்பொருள்களையும் விரிவாக எடுத்துக்கூறியுள்ளார். ஒவ்வொரு நிலத்தைக் கொண்டும் அவற்றை வேளாண் சுற்றுலாவோடு தொடர்புபடுத்த முடியும்.
மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலமானது தென்றல் வீசும் பசுமை படர்ந்த காடுகளை உள்ளடக்கி இருக்கிறது. தற்போது சிறுதானியங்கள், மலைப்பயிர்கள், காய்கறிகள், தேயிலைத் தோட்டங்கள், வாசனை - நறுமணப் பயிர்கள் எனச் சாகுபடி நீண்டிருந்தாலும் தொல்காப்பியர் கூறும் தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல் இன்னமும் மறைந்து போகவில்லை.